• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பத்தாண்டு படைத்தவர் தான் சுந்தர்.சி.

சினிமா

ஒரு இயக்குனர் ஒரு பத்தாண்டை தம் படங்களால் சிரிக்க வைத்து டென்ஷன்களை தூக்கியெறிய செய்யமுடிந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பி விடுவீர்கள்.
ஏனென்றால் அந்த பத்தாண்டில் அவர் உருவாக்கிய காமெடிகள் பின்னாளிலிருந்து இந்நாள் வரை டிவி, யூடியூப், ஷார்ட்ஸ் காமெடிகளாகவும், மீம்களாகவும் இருக்கிறது.
அப்படி ஒரு பத்தாண்டு படைத்தவர் தான் சுந்தர்.சி.

சுந்தர்.சியின் அசால்ட்டான காமெடிகள் கெரியரில் வந்ததும், அப்போது சாட்டிலைட் சேனல்கள் வந்ததும் சரியாக இருந்தது. அவை இரண்டையும் ஒன்றையொன்று தாங்கிப்பிடித்ததும் நிஜம்.
மணிவண்ணனின் சிஷ்யரான சுந்தர்.சி 'முறை மாமன்'எடுத்த போது அவர் குருவிடமிருந்து காமெடி ஜானரை மட்டும்  எடுத்துக்கொண்டார். அப்படி முதல் படத்திலேயே காமெடி கலந்து சுந்தர்.சி பெரு வெற்றியை பெற்றதோடு, அந்தப்படம் அவருக்கு வாழ்க்கைத்துணையையும் பெற்றுத்தந்தது. சுந்தர் கே.விஜயன், முக்தா சுந்தர் என இயக்குனர்கள் இருந்ததால் வினாயக சுந்தரவேல் மாறியது சுந்தர்.சிக்கு.
முறைமாப்பிள்ளை உடனே புக்காக தியாகராஜன் மகன்  பிரசாந்தை அறிமுகப்படுத்திய அன்பாலயா பிரபாகரன் இம்முறை விஜயகுமார் மகன் அருண்விஜய்யை கொண்டு வந்தார். முறை மாப்பிள்ளை ஷூட்டிங்கில் அன்பாலயா பிரபாகரன் முறைத்த மாப்பிள்ளையாக ஆக கருத்து வேறுபாடால் வெளியேறினார் சுந்தர்.சி. போஸ்ட் ப்ரடக்ஷன் வேலைகளை பிரபு சாலமன் தான் பார்த்தார்.
அடுத்து சுந்தர்.சி படைத்தது ஒரு நூற்றாண்டின் காமெடி எனலாம். உள்ளத்தை அள்ளித்தா..."நான் கேட்டது..." என நக்மாவை சுந்தர் நினைக்க, "எனக்கு கிடைச்சது.." என வந்தார் ரம்பா. அதற்காக ரம்பாவை சும்மாவும் விடவில்லை அவர். ரம்பாவை இவ்வளவு சிறப்பாக வேறு படத்தில் காட்டி இருப்பார்களா தெரியாது. உள்ளத்தை அள்ளித்தா பார்த்து விட்டு சிரிக்காமல் ஒரு மனிதனும் வெளியே வந்ததே கிடையாது. அது வரை ஐட்டம் டான்சராக இருந்த ஜோதி மீனாவை இரண்டாவது நாயகியாக்கி ஒரே கல்லில்  கவர்ச்சி+காமெடி மாங்காய்களை அடித்தார். உ.அ.தா வெற்றி உச்சாணியில் வைத்தது சுந்தரை.
பின் மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன்வருவான், அழகான நாட்கள் என மும்மூர்த்திகளான கவுண்டமணி-கார்த்திக்-சுந்தர் காமெடி பிரசாதங்களை அள்ளி அள்ளிக்கொடுத்தனர். கார்த்திக்கோடு மட்டுமே வேண்டாமென பிரபுதேவாவோடு 'நாம் இருவர் நமக்கு இருவர்', சத்யராஜோடு 'அழகர்சாமி', சரத்குமாரோடு 'ஜானகி ராமன்', பிரசாந்தோடு 'வின்னர்', அர்ஜுனோடு 'கிரி'வெரைட்டி ரைஸ்சும் கொடுக்க முடிந்தது சுந்தர்.சியால்.
சுந்தர்.சியே எதிர்பார்க்காத ஒரு விஷயம்   அவர் வாழ்வில் காதலி குஷ்புவால் நிகழ்ந்தது. அது தான் 'அருணாச்சலம்'. சூப்பர் ஸ்டாரோடு இணைந்தது. ஆனால் ரஜினியின் அப்போதையா மாஸும், சுந்தர்.சியின் தரலோக்கல் காமெடியும் சரியாக சேராமல் ஒரு கதம்பச்சோறாய் அருணாச்சலம் வெளி வந்தது. இன்னும் சிறப்பான படத்தை சுந்தர்.சி ரஜினிக்கு தந்திருக்கலாம் என்பதாக தான் கருத்திருந்தது.

கவுண்டமணியோடு சாரட் வண்டியில் பயணித்த சுந்தர்.சி வடிவேலுவோடு டிரைசைக்கிளில் பயணித்தது வின்னர் படத்தில் தொடங்கியது. வின்னர் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் அதன் காமெடி ஒரு மைல் கல்லாக வடிவேலுவுக்கு அமைந்து விட்டது. சுந்தர்.சி வடிவமைத்த 'கைப்புள்ள' இன்று தமிழர்களின் வாழ்வில் வராத நேரமே கிடையாது. வின்னர் போன்றே அவர் பின்னாளில் வடிவேலுவோடு சேர்ந்த படங்களெல்லாம் இன்று யூடியூப், காமெடி சேனல்களில் டாப் ப்ளேஸ். பேக்கரி வீரபாகு, மேஜிக் கிரிகாலன், ஸ்டைல் பாண்டியெல்லாம் இன்றும் ரசிக்கும் கேரக்டர்கள். 
எல்லா இயக்குனரும் கமலோடு சேர ஆசைப்படுவது போல கமலோடு 'அன்பே சிவம்' படத்தில் இணைந்தது சுந்தர்.சிக்கு ஒரு புதிய அனுபவம். அன்பே சிவம் ஒரு டிராவலிங் படம். சுந்தர்.சி கமலோடு செய்த டிராவல் நிறைய அனுபவங்களை அவருக்கு தந்திருக்கும். நல்ல படத்தை தந்ததும் சேர்த்து.
அஜித்தோடு உன்னை தேடியில் இணைந்த போது அஜித் இப்போது போல மாஸ் ஸ்டார் கிடையாது. ஆனாலும் அதிலும் காமெடியும், சென்டிமெண்ட்டும் என பின்னியிருப்பார் சுந்தர். மாதவனோடு இணைந்து திருச்சியில் திருமணமண்டபம் தீப்பற்றி எறிந்த நிகழ்வை வைத்துஉருவாக்கிய ரெண்டு படம் ஒரு வித்தியாசமான முயற்சியாக நினைத்து எடுக்கப்பட்டவை.
வெறும் காமெடியாகவே போகிறோமே...ஒரு சீரியஸ் காதல் கதை கொடுக்கலாமென நினைத்து எடுத்தது தான் 'உள்ளம் கொள்ளை போகுதே..'  பார்வை போன பெண்ணுக்கு மிமிக்ரியை வைத்து சமாதானப்படுத்துவதான தீமில் உருவான இப்படம் போகவில்லை. இதே பார்வையற்றவரை வைத்து இதே மாதிரி ஆள்மாறாட்டக்கதையான லண்டன் காமெடியும் சுமாராகவே போனது. 
கலகலப்பு, அரண்மனை என்கிற இரண்டு கருக்களோடு சுந்தர்.சி ஒதுங்கக்காரணம் அவர் நாயகனாக நடிக்கத்தொடங்கியது எனவும் சொல்லலாம். பெரிதாக அவருக்கு நாயகனுக்கான தனி மார்க்கெட் வளரவில்லை. தலைநகரம் படத்தில் வடிவேலு அளவுக்கு சுந்தர்.சி நினைவில்லை. நகரம் படத்திலோ வடிவேலுவைத்தவிர கதையே நிற்கவில்லை. வாடா, சண்டை, ஆயுதம் செய்வோம் போன்ற படத்தின் பெயர்களெல்லாம் தெலுங்கு டப்பிங் பட ரேஞ்சில் இருந்ததால் அந்நியப்பட்டுப்போனார் சுந்தர்.சி.
விவேக்கோடும், சந்தானத்தோடும் அவர் செய்த காமெடிகள் தனி ஸ்டைல் வகை. மார்க்கெட் வேல்யூ இல்லாத விமல், சிவா இருவரை வைத்து ஒரு ப்ளாக்பஸ்டர் கொடுக்க சுந்தர்.சியால் மட்டுமே முடியும்.  சந்தானத்தின் வெட்டுபுலி காமெடியெல்லாம் எப்படி எழுதினார்கள் என்றே நினைத்துப்பார்க்க முடியவில்லை. திமிங்கிலம், பேய், மண்ட சாயம் காமெடியெல்லாம் நினைத்து நினைத்துசிரிக்க வைப்பவை. 
ரஜினியோடு ஒரு படம், ரஜினியின் கதையில் ஒரு படம், ரஜினியின் பட டைட்டிலில் ஒரு படம், ரஜினி நடித்த ஒரு படம் என ரஜினியோடு நெருக்கமானவர்.
சுந்தர்.சி படங்களின் காமெடிகளும், நிறைய காட்சிகளும் ஏற்கனவே பார்த்ததாக தோன்றினாலும், அதையும் மீறி நாம் சிரித்து விடுவது தான் சுந்தர்சியின் படைப்பிலக்கணம். மணிவண்ணனிடமிருந்த எம்.ஆர்.ராதா, இளவரசுவிடமிருந்த சுருளிராஜன், சுப்பு பஞ்சுவிடமிருந்த நம்பியார், ஜோன் விஜய்யிடமிருந்த ராதாரவி, ஜெய்கணேஷிடமிருந்த தங்கவேலு என பலரை வெளியில்கொண்டு வந்தது சுந்தர்.சியின் திறமை.
பல்லாண்டு வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுந்தர்.சி சார்.....

Leave a Reply