• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளை ரோஜா

சினிமா

1982 இல் போஸ்ட் மார்டம் என்ற படம் மலையாளத்தில் வெளியானது. டாக்டர் பவித்ரன் கதை, திரைக்கதை எழுத, சசிகுமார் படத்தை இயக்கியிருந்தார். இதுவொரு த்ரில்லர் திரைப்படம். பிரேம் நசீர், மம்முட்டி, சுகுமாரன், ஸ்வப்னா, பாலன் கே.நாயர், போன்றவர்கள் நடித்திருந்தனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தமிழில் வெள்ளை ரோஜா என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.

பிரேம் நசீர் நடித்த பாதிரியார், போலீஸ் அதிகாரி என்ற இரட்டை வேடங்களில்  சிவாஜியும், மம்முட்டி நடித்த வேடத்தில் பிரபுவும் நடித்தனர். அம்பிகா, ராதா, சிவச்சந்திரன், பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா, மனோரமா, ஒருவிரல் கிருஷ்ணராவ் உள்ளிட்டவர்கள் உடன் நடித்தனர்.

இளையராஜா இசையமைக்க, ஏ.ஜகந்நாதன் படத்தை இயக்கினார். 39 வருடங்களுக்கு முன், 1983 நவம்பர் 4ம் நாளில் வெளியான வெள்ளை ரோஜா மலையாளப் படம் அளவுக்கு வெற்றி பெற்று 100 நாள்களை கடந்து ஓடியது.

அதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஏ.எல்.நாராயணன் தமிழுக்கேற்ப போஸ்ட் மார்டம் படத்தின் திரைக்கதையை எழுதியது தான். இரண்டாவது இளையராஜாவின் இசையும், பாடல்களும். மலையாளப் படத்தில் ஒரு பாடல், ஒரு கோரஸ் என இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றன.

வெள்ளை ரோஜாவில் ஐந்து பாடல்களை தனது இசையால் இளையராஜா இழைத்திருந்தார். முத்துலிங்கம் எழுதிய சோலைப் பூவில் மாலைத் தென்றல்…, நா.காமராசன் எழுதிய ஓ மானே மானே மானே உன்னைத்தானே.., வாலி எழுதி, மலேசியா வாசுதேவன் பாடிய தேவனின் கோவில்… ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

சிவாஜி மீது ரசிகர்களுக்கு இருந்த கிரேஸ் படத்துக்கு நல்ல ஓபனிங்கை பெற்றுத் தந்து வெள்ளை ரோஜாவை வெற்றிப் படமாக்கியது.மலையாளப் படங்களை தமிழ்ப்பட இயக்குநர்கள் ரீமேக் செய்யும் போது அவை பெரும்பாலும் தோல்வியை தழுவுகின்றன.அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும், மலையாளப் படங்களை தமிழ்ப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொள்ளவும் வெள்ளை ரோஜா திரைப்படம் உதவும்.
 

Leave a Reply