• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனிதநேயம் மலர்ந்த நாளை மனிதநேய நாளாகக் கொண்டாடுவோம்..

சினிமா

இந்திய திருநாட்டிலும், உலகத்திலும் எத்தனையோ அரசியல் தலைவர்கள், தியாகிகள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால், தான் உழைத்து சம்பாதித்த பணத்தை, வாழும் காலம் முழுவதும் கொடுத்துக்கொண்டே இருந்த ஒரே ஒரு தலைவர் என்றால், அது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மட்டும்தான்.

அதேபோல் இந்த உலகிலேயே திரைப்படக் கலையை மிகச்சிறப்பாக புரிந்துகொண்டு, அதன்மூலம் மக்களுக்கான வாழ்வியல் பண்புகளை, அறம் சார்ந்த கருத்துகளை பாடல்களாக, வசனங்களாக, காட்சியமைப்புகளாகப் புகுத்தி சமூகப்புரட்சி நிகழ்த்தியவரும் புரட்சித்தலைவர் மட்டும்தான்.

சினிமாவில் தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம், ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றிக் கொடுத்த ஒரே தலைவரும் புரட்சித்தலைவர் மட்டும்தான். கலியுக வள்ளல் புரட்சித்தலைவரின் பிறந்த இந்நாளில் அவர் சமூகத்திற்கும், நாட்டிற்கும் செய்த நன்மைகளை பட்டியலிட ஏடும், நாளும் போதாது. எனவே, ஆட்சியில் பாமர மக்களுக்கு அவர் செய்த ஒருசில சாதனைகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பசியின் கொடுமையை இளம்வயதிலே அனுபவித்தவர் புரட்சித்தலைவர். அதனாலே தன்னை சந்திக்க வரும் அத்தனை பேரையும் முதலில் சாப்பிட வைத்து, அதன்பிறகே அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துதருவார். ஏழையின் மகிழ்ச்சியில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர்.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாணவர்கள் மட்டுமின்றி குழந்தைகள், முதியோர்களும் பட்டினியோடு இருக்கக்கூடாது என்பதற்காகவே அனைவருக்கும் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அத்துடன் இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச காலணி, இலவச பல்பொடி என்று மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான அத்தனை உதவிகளும் செய்துகொடுத்தார்.

ரேஷன் கடைகளில் நடைபெற்ற ஊழல்கள், செயற்கை தட்டுப்பாடுகளை நீக்கி அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் 22 ஆயிரம் புதிய ரேஷன் கடைகளை உருவாக்கினார். வயிறார உண்ட மக்கள் மனதார வாழ்த்திய காரணத்தாலே, மறையும் வரையில் புரட்சித்தலைவர் வெற்றி மேல் வெற்றி அடைந்தார். ரேஷன் அரிசி தருவதற்கு மத்திய அரசு சுணக்கம் காட்டிய நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்து காரியம் சாதித்தவர்.

பரம்பரையாக வந்த கர்ணம், தலையாரி பதவிகளில் இருந்த சீர்கேடுகளை ஒழித்துக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் என்ற வி.ஏ.ஓ. பதவியை உருவாக்கி அரசுக்கும், மக்களுக்கும் இடையிலிருந்த இடைவெளியைக் குறைத்தார். படிக்காத பாமர மக்களையும், ஏழைகளையும் துன்புறுத்தி வந்த சைக்கிளில் 'டபுள்ஸ்', '41 கிளாஸ்' எனும் சந்தேக வழக்கு போன்ற அடக்குமுறை சட்டங்களை நீக்கி ஏழைகள் வயிற்றில் பால் வார்த்தார்.

குடிசை வீடுகளுக்கு ஒரு விளக்குத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரையிலும் மாதந்தோறும் உதவித்தொகை, முதியோர்களுக்கு உதவித்தொகை, மகளிர் காவல் நிலையம் போன்ற புரட்சிகரமான திட்டங்களை எல்லாம் தமிழகத்திற்கு முதன்முதலில் கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர்.

பெண்களுக்காக அன்னை தெரசா பல்கலைக்கழகம், மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன் வளர்ப்பதற்காக சுயநிதி பொறியியல் கல்லூரிகள், மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு, இடஒதுக்கீட்டில் புரட்சி, தெலுங்கு கங்கை திட்டம் போன்ற தனித்தன்மையான நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார்.

மாற்றுத்துணி இல்லாமல் ஏழைகள் கஷ்டப்படுவதை கண்டு வருந்தியே, இலவச வேட்டி-சேலை திட்டத்தை கொண்டுவந்தார். அதோடு ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி, தாலிக்குத் தங்கம், விதவைகளுக்கு உதவித்தொகை, விதவை மறுவாழ்வுத் திட்டம் என புரட்சித்தலைவர் ஏழைகள் நலனுக்காகவே திட்டங்களைத் தீட்டினார்.

முதலமைச்சராக மட்டுமல்ல, அவர் நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய காலம் முதலே உழைத்து சம்பாதித்த பணத்தை மக்கள் சேவைக்குப் பயன்படுத்தினார். 1959-ம் ஆண்டிலேயே தன்னுடைய தாயார் பெயரில் ரூ.3 லட்சத்தில் தொடங்கப்பட்ட, 'தி சத்யா எஜூகேசனல் அண்ட் சாரிட்டபிள் சொசைட்டி' என்ற அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவத் தொண்டு செய்தவர். புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும், நாட்டுக்கு ஒரு தேவை என்றாலும் முதல் உதவி செய்யும் நபராக புரட்சித்தலைவரே இருந்துவந்தார்.

அதனால்தான், மனிதநேயத்தின் மனித அவதாரமாக புரட்சித்தலைவரை அவரது பக்தர்களும், ரசிகர்களும், தொண்டர்களும் வணங்கி வருகிறார்கள். எந்த பிரதிபலனும் பாராமல் தங்களுடைய சொந்த செலவில் காலம் முழுவதும் மக்கள் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் வணங்கி, உறுதுணையாக நிற்பதுடன், சேவையின் மூலம் புரட்சித்தலைவரின் புகழை காலம் முழுவதும் மக்களிடையே கொண்டுசென்று, மனிதநேயத்தை வளர்ப்போம்.

- சைதை துரைசாமி,
 

Leave a Reply