• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...அப்படி பட்டவரின் 107 வது பிறந்த நாள் இன்று

சினிமா

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. இந்த வரிகள் நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய ஒரு மனிதர், ஒரு சகாப்தம் என்றென்றும் மறையாத மாணிக்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.. 

திரையில் மக்களின் வளர்ச்சிக்காக பஞ்ச் வசனங்கள் பேசுவது எளிது தான்.. ஆனால் அதை நடைமுறை படுத்துவதும், மக்களுக்காக களத்தில் இறங்கி பாடுபடுவதும் அவ்வளவு எளிதானதல்ல.. அதை தனது செயலில் செய்து சாதித்து காட்டிய உன்னத தலைவர் எம்.ஜி.ஆர். 

குடும்பத்தின் வறுமைக்காக நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவருக்கு பின்னாளில் அதுவே ஆஸ்தான தொழிலாய் மாறியது. 1936-ல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தவருக்கு உடனே வெற்றி கிடைக்கவில்லை. 1947-ம் ஆண்டு வரை ஒரு நடிகர் என மூன்றாவது ஒரு ஆளாகவே பார்க்கபட்டவர் அடுத்த 25 ஆண்டுகளில் தன் வீட்டில் ஒரு உறவாகவே பார்க்கும் படியாக திரையில் வளர்ச்சி கண்டார் எம்.ஜி.ஆர்.

அவரது திரைப்பட சாதனைகள் என்று எடுத்துக் கொண்டால், முதன்  முதலில் மத்திய அரசால் சிறந்த தமிழ் படம் என தேர்வு செய்யப்பட்ட படம் என்றால் அது எம்.ஜி. ஆர் நடிப்பில் வெளியான மலைக்கள்ளன் படம் தான். அதே போல காவல்காரன் படத்திற்காக முதன் முதலில் தேசிய விருது பெற்ற நடிகரும் எம்.ஜி.ஆர் தான். முழு நீள கலர் படம் அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற பல சாதனை படங்களில் நடித்து 1940 முதல் 1980 காலகட்டத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்த நாயகன் எம்.ஜி.ஆர்.

நடிப்பின் மூலம் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர், அரசியலுக்குள் வந்தது என்னவோ எதேச்சையாகத் தான் என்றாலும், பின்னாளில் தங்களுக்கான தலைவர் இவர் தான் என்று அந்த சிம்மாசனத்தில் சிங்கமென அமர்ந்தார் எம்.ஜி.ஆர்.,

திமுகவில் பிரதிநிதியாக இருந்தவர், அங்கு ஏற்பட்ட மனக்கசப்பால் அங்கிருந்து பிரிந்து 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை உருவாக்கி 1977 மற்றும் 1987-ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.,

திரைப்படங்களில் சாதனை படைத்தவர், அரசியலில் விட்டு விடுவாரா என்ன? சத்துணவுத் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, மகளிருக்கு சேவை நிலையங்கள், தங்கும் விடுதிகள், இலவச சீருடை, காலனி, பாடநூல் வழங்கும் திட்டம் என ஏழை, எளிய மக்களுக்கு இவர் வழங்கிய திட்டங்களும், உதவிகளும் எண்ணிலடங்காதவை.. 

எம்.ஜி.ஆரின் சாதனைகள் பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது, இத்தனை காலம் உழைத்தவர் இளைப்பாற வேண்டும் அல்லவா? 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார் எம்.ஜி.ஆர்., உலகம் இருக்கும் வரை அவரது பெயரும், சாதனையும், புகழும் இருந்து கொண்டே தான் இருக்கும்.. மக்கள் மனதில் அந்த சிம்மாசனத்தில் அவரும் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்..
 

Leave a Reply