• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருவள்ளுவராண்டு 2055 பிறந்துள்ளது

தமிழ்நாடு

திருவள்ளுவராண்டு 2055 பிறந்துள்ளது. இது புதிதாகவும் முற்றுறுதிபெறாத  ஆய்வின் அடிப்படையில் திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக கி.மு 31 ஐக் கொண்டு நிறுவப்பெற்ற ஓர் ஆண்டுமுறை. 
தை மாதம் முதல் நாளை ஆண்டின் தொடக்கமாகக் கொள்கின்றோம். இது புது வழக்கமே. தைமாதம் போன்ற மாதங்களும் பழைய இந்திய முறைப்படியான மாதங்களில் ஒன்றே. 
தைமாதம் முதல் நாள் தமிழர்களுக்கு சிறப்பான நாள் என்பதாலும் கதிரவனின் வடச்செலவு (கதிரவன் வடக்கு நோக்கிய திசையில் நகரத்தொடங்கும் நாள்) தொடங்கும் நாள் என்பதாலும் வானியல் அடிப்படை கொண்ட ஒரு நாள். கதிரவனைச் சுற்றிவரும் சற்றே நீள்வட்டப்பாதையில் எந்தப் புள்ளியையும் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளலாம். கிரிகோரிய (Gregorian) நாள்காட்டி முறையில் சனவரி 1 என்பது எந்த வானியல் சிறப்பு அமைப்பும் கொள்ளாத ஒரு நாள் தான். 

மரபாகத் தமிழர்கள் பலகாலம் (எவ்வளவு காலம் என்பது தெரியவில்லை ஆனால் சங்கக்காலம் தொட்டு இல்லை) சித்திரை முதல் நாளை (ஏப்பிரல் 14) தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி வந்தார்கள், இன்றும் கொண்டாடுகின்றார்கள். ஆனால் இது 60-ஆண்டுச் சுழற்சியில் ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வருவதாகக் கொள்வதால் 2024 போன்ற தொடராண்டாக அறிய முடியாமல் போவதாலும், கசப்பான புராணக் கதைகள் கட்டி ஆண்டுகளின் வரலாறு சொல்லப்படுவதாலும் ஆண்டின் பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக இல்லாததாலும் மாற்றாக தைமாத முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழ்நாட்டரசு முன்னர் அறிவித்தது. 
இது மக்களிடையே சிலரால் ஏற்கப்பட்டும் சிலரால் ஏற்கப்படாமலும் உள்ளது இன்றைய நிலை. ஆனால் எல்லோரும் ஏற்கத்தகக்து திருவள்ளுவராண்டு என்னும் தொடராண்டு முறை. கி.மு 31 என்பது முற்றுறுதியாக நிறுவப்படாததாக  இருந்தாலும் அப்படிக் கொள்வதில் தவறில்லை. 
அது கிபி 150 ஆக இருந்தாலும் கி.பி 350 ஆக இருந்தாலும் கவலுற வேண்டியதில்லை. திருவள்ளுவரின் பெயரில் ஒரு தொடராண்டு முறை இருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது. பின்னர் நிறுவப்பட்டால் திருவள்ளுவர் திருவள்ளுவராண்டு 247 இல் பிறந்தார் என்றும் கூடச் சொல்லலாம். இந்த ஆண்டு முறை மறைமலை அடிகள் போன்றோர் செய்த ஆய்வின் பயனாய் பல பத்தாண்டுகள் கழித்து 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டரசின் அறிவிப்பால் உருவான முறை என்று உண்மையாகப் பதிவு செய்து தொடரலாம் என்பது கருத்து. 
60-ஆண்டு சுழற்சி முறையில் அமைந்த ஆண்டினை சித்திரைப் புத்தாண்டு என்றும் (அதாவது சித்திரை மாதம் தொடங்குவதாகக் கொள்ளும் ஆண்டு முறை - புராணங்களை ஒதிக்கிவிடலாம்- என்றும் தைப்புத்தாண்டு, திருவள்ளுவர் புத்தாண்டு என்றும் கொள்ளலாம். 
எது தமிழர் புத்தாண்டு என்றால் தமிழ் மக்கள் இரண்டு புத்தாண்டுகள் கொண்டாடுகின்றார்கள் என்று சொல்லலாம். நீள்வட்டத்தில் எந்தப் புள்ளியிலும் ஆண்டுமுறை தொடங்கலாம். கதிரவனைச் சுற்றிவரும் பூமிக்கு நான்கு நாள்கள் சில சிறப்புகள் உள்ள நாள்கள். 
திசம்பர் 21-22, 
மார்ச்சு 21, 
சூன் 21, 
செட்டம்பர் 23. 
இவற்றில் மார்ச்சு 21, செட்டம்பர் 23 ஆகிய நாள்கள் சமப் பகலிரவு நாள்கள் 
திசம்பர் 22 மிகக்குறுகிய பகல் கொண்ட நாள், 
சூன் 21 மிக நீண்ட பகல் கொண்ட நாள். 
இவற்றை நாம் சமப் பகலிரவு நாள்கள் (equinox), நெடும்பகல் நாள் (சூன் 21), குறும்பகல் நாள் (திசம்பர் 22), அதாவது பகல் நேர எல்லை நாள்கள் (ஆக நீண்ட அல்லது ஆகக் குறைந்த)  என்று கொள்ளலாம். எல்லை நாள்களைத் திருப்புநாள்கள் என்றும் சொல்லலாம். நெடும்பகல் நாளைக் கோடைத்தொடக்க நாள் என்றும் குறும்பகல் நாளைக் குளிர்த்தொடக்க நாள் என்றும் சொல்லலாம். ஆனால் புவியின் தென் கோளத்தில் இவை தலைகீழாக மாறும். அதாவது கோடை என்பது குளிராகவும், குளிர்க்காலம் என்பது கோடைக்காலமாகவும் மாறும். 
நன்றி : செ. இரா. செல்வக்குமார்

Leave a Reply