• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி... சட்டுனு கை கொடுத்த எம்.எஸ்.வி - அப்படி என்ன நடந்தது?

சினிமா

இளையராஜா வந்த பிறகு எம்.எஸ்.விக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்று பரவலாக பேசப்பட்டாலும் எம்.எஸ்.வி – இளையராஜா இருவரும் இணைந்தே சில படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

தமிழ் க்ளாசிக் சினிமாவில் மெல்லிசை மன்னர் என்று பெயரெடுத்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் பலருக்கும் தனது இசையின் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்த எம்.எஸ்.வி கண்ணதாசன் கூட்டணியில் கொடுத்த அத்தனை பாடல்களும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடல்களாக இன்னும் போற்றப்படுகிறது.

எம்.எஸ்.வி தமிழ் சினிமா இசையின் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் 80-90 களில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். தனது படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் அந்த படம் வெற்றி என்று பல இயக்குனர்கள் நினைத்த காலம் அது.

இளையராஜா வந்த பிறகு எம்.எஸ்.விக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்று பரவலாக பேசப்பட்டாலும் எம்.எஸ்.வி – இளையராஜா இருவரும் இணைந்தே சில படங்களுக்கு இசையமைத்துள்ளனர் என்று எம்.எஸ்.வி மகன் பிரகாஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இளையராஜா எம்.எஸ்.விக்கு போட்டி என்று சொல்வார்கள். ஆனால் அப்பா எதிலும் ஈகோ பார்க்க மாட்டார்.

கடந்த 1986-ம் ஆண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன், அமலா, ராதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மெல்ல திறந்தது கதவு. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் இளையராஜா தான் கமிட் ஆனார். ஆனால் அவருக்கு பல படங்கள் கமிட் ஆனதால் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், அவர் அப்பாவிடம் போன் செய்து அண்ணே இந்த படத்திற்கு நீங்கள் இசையமைக்க முடியுமா என்று கேட்டார்.

அதனை உடனே ஏற்றுக்கொண்டு அந்த படத்திற்கு அப்பா (எம்.எஸ்.வி) இசையமைத்திருந்தார். அந்த படத்தில் 7 பாடல்கள் உள்ளது அத்தனை பாடல்களும் ஹிட் பாடலாக அமைந்தது. அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதற்காக சென்றபோது அவர், சொல்லித்தரமாட்டேன் நீங்களே உங்க ஸ்டைலில் பாடுங்கள் என்று சொல்ல அப்பா 5 மணிநேரம் பாடி முடித்தார். அதன்பிறகு பாடியதை கேட்கலாமா என்று கேட்டபோது அப்புறம் போட்டு காட்டுகிறேன் என்று ஏ,ஆர்.ரஹ்மான் சொல்விட்டார்.

ஆனாலும் முதல் முறையாக அவரின் இசையில் பாடியுள்ளோம். அவருக்கு ஓகே வா இல்லையா என்று நினைத்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு எஸ்.பி.பி சாரை அழைத்து இது மாதிரி ஏ,ஆர்.ரஹ்மான் இசையில் பாடினேன் அது ஓகேவா இல்லையா என்று கேட்டு சொல்லு என்று கூறியதாக எம்.எஸ்.வி பிரகாஷ் கூறியுள்ளார்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply