• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய வார்ப்புகள்

சினிமா

பாரதிராஜா 'புதிய வார்ப்புகள்' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.
இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.
முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு 'ட்யூன்' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.
அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. 'இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டியூன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்' என்றார்.
நான் பாரதியிடம், 'யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?' என்றேன்.
பாரதியும் விடவில்லை. 'அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?' என்று கேட்டார்.
'சரி காலையில் பார்க்கலாம்' என்று சொல்லி போனை வைத்தேன்.
மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டியூனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.
டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.
கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.
கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் 'டூயட்தானே?' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.
'ஆமாண்ணே' என்றேன்.
'டியூனை பாடு' என்றார்.
பாடினேன்.
'இன்னொரு முறை பாடு' என்றார்.
மீண்டும் பாடினேன்.
உடனே கவியரசரிடம் இருந்து டியூனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.

'வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவர் சொன்னதை நான் டியூனோடு பாடிக்காட்டினேன். 'கண்டுகொண்டேன் ராமனை' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.
கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.
மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார்.
பாரதி 'ஓ.கே' சொன்னார்.
பாடல் பதிவானது!
 கு பண்பரசு

Leave a Reply