• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்ப் பிரிவினைவாதிகள் பிக்குகளின் ஆதரவை பெற சூழ்ச்சி

இலங்கை

தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். இலங்கை சமஷ்டி நாடாவது அவர்களின் அழுத்தத்தால்தான் தடுக்கப்பட்டு வருகின்றது எனவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு பயங்கரமான நிலையை எதிர்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறானதொரு நிலைமையை எதிர்கொள்ளவில்லை. ஜனாதிபதியின் படமொன்று அண்மையில் ஊடகத்தில் வெளியானது.

ஒரு புறத்தில் பிக்குகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் இருந்தனர். மறுபுறத்தில் உலகத் தமிழ் பேரவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.

இமயமலை பிரகடனம் எனக்கூறி பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆறு யோசனைகள் உள்ளன. இலங்கையை சமஸ்டி நாடாக்கி, அதன்மூலம் ஈழத்தை அடைவதே அதன் நோக்கமாகும்.

ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளனர்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இமயமலை பிரகடனத்துக்கு இணக்கம் என்ற தகவலை தற்போது அவர்கள் பரப்பி வருகின்றனர்.

தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப இந்நாடு சமஸ்டி நாடாக மாறாமல் இருப்பதற்கு பிக்குகள் சமூகமே காரணம். எனவே இந்த இமயமலை பிரகடனத்துக்கு இணங்ககூடாது என கலாநிதி குணதாச அமரசேகர வலியுறுத்தி உள்ளார்.
 

Leave a Reply