• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலண்டனில் வித்தியாலக்சுமி வயலின்பயிற்சி நிலையம் வழங்கிய  மார்கழி உற்சவம் 

கனடா

இலண்டனில் கடந்த 22 டிசம்பர் 2023 இல் வயலின் ஆசிரியை ஸ்ரீமதி கௌசல்யா சத்தியலிங்கம் அவர்களின் வித்தியாலக்சுமி வயலின்பயிற்சி நிலைய  மாணவர்களால்  வருடாந்த இசை ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வானது " அருணோதயமே " என்ற வர்ணத்துடனும் விநாயகர் கிருத்தியுடனும் இனிதே ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து வந்தே மீனாட்சி, ரம்ய நர்த்தனா", ஜதீஸ்வரம் , வர்ணம் , தில்லானா என மாணவர்களின் வாசிப்பால் மண்டபமே மகிழ்வில் திளைத்திருந்தது. நின்னுக்கோரி, பாதிமம் பார்வதி, காக்கைச் சிறகினிலே, ஒளி படைத்த கண்ணினை போன்ற பல பாடல்களை மாணவர்கள் அதி அற்புதமாக வாசித்து அவையோரின் பலத்த கரகோசத்தைப் பெற்றனர். 

இந் நிகழ்விற்கு பக்கவாத்திய இசைக் கலைஞர்களான சதீஸ் கௌண்தமால் மிருதங்கமும், தயாபரன் தனபாலன் கடமும் , ஜெயகீர்த்தன் ஜெயதேவன் கஞ்சீராவும் , சர்ஜுன் சிற்பரன் சுரத்தட்டு இசையையும், சேயோன் சிவலீலன் புல்லாங்குழல் இசையினையும் வழங்கி மேலும் மெருகேற்றியிருந்தனர்.

நிறைவாக பஞ்சரத்தினம் இடம் பெற்றது. இதில் ஸ்ரீமதி திலகசக்தி ஆராமுதனின் மாணவர்கள் வாய்ப்பாட்டினையும் , ஜெசிக்கா நித்தியானந்தா வீணை இசையினையும் ஸ்ரீமதி கௌசல்யா சத்தியலிங்கத்தின் மாணவர்கள் வயலின் இசையினையும் இணைந்து வழங்கியிருந்தனர். அதுமட்டுமன்றி ஆசிரியர்களான திலகசத்தி ஆராமுதன், சிவதர்சிகாவும் வாய்ப்பாட்டில் இணைந்திருந்தனர்.  வித்தியால ஆசிரியை ஸ்ரீமதி கௌசல்யா சத்தியலிங்கத்தின்  புதல்வன் சைந்தவன், புதல்வி லக்க்ஷிமியும் இணைந்து வயலின் இசையை வழங்கியிருந்தனர். மேடை நிறைந்த இசைக் கலைஞர் கண்ணுக்கும் காதுக்கும் இனிய விருந்தினை வழங்கி பஞ்சரத்தினத்தில் நனைய வைத்தனர்.

ஸ்ரீமதி கௌசல்யா சத்தியலிங்கம் அவர்களின் அன்பான இனிமையான கனிவு நிறைந்த பயிற்றுவிப்பை இந்நிகழ்வில் நன்கு உணரமுடிந்தது. வித்தியாலக்ஷ்மி என்ற பெயருக்கேற்றாற் போல வயலின் இசையில் மாணவர்கள் வித்தையைக் காட்டி அவையோரை அகங் குளிர வைத்தனர். வருடம்தோறும் நடைபெற்று வரும் மார்கழி உற்சவமானது வருடங்கள் ஏற ஏற மேலும் மேலும் மெருகேறி நல்லதொரு தரமான நிகழ்வாக மிளிர்ந்துகொண்டே செல்வதில் பள்ளியின் ஆசிரியைக்கு மட்டுமன்றி கணவர் சத்தியலிங்கத்திற்கும் பெரும் பங்கு உண்டு என்பதை அறியமுடிந்தது. வருட நிறைவில் நல்லொதொரு இசையால் மனம் நிறைந்து வித்தியாலக்ஷ்மி பள்ளி மேலும் மேன்மையுற இறைவனை வேண்டுகிறேன். 

அகல்யா நித்தியலிங்கம்
 

Leave a Reply