• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புனித மிக்கேல் கல்லூரிக்கு சூரிய சக்தியில் மின்சாரம்! கனடா பழையமாணவர் சங்கம் சாதனை

சினிமா

 இலங்கையின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சூரிய மின்சார சக்தியில் செயற்படுகின்ற பாடசாலையாக மாற்றும் முயற்சியில் அந்தக் கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பமாகி 150 வருடங்கள் நிறைவை முன்னிட்டு கனடாவில் வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் சுமார் 3.2 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பெறுபேறினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதன் ஊடாக, கிழக்கு மாகாணத்தில் சூரிய மின்சாரத்தில் செயற்படுகின்ற முதலாவது பாடசாலை என்கின்ற பெருமையை புனித மிக்கேல் கல்லூரி பெறுகின்றது.

இது சம்மந்தமாக புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் தலைவர் பிரசாட் ஜீவரெட்னத்தை தொடர்புகொண்டு கேட்பொழுது, 'கல்லூரியின் 150 வருட நிறைவின் ஞாபகமாக இந்தப் பணியை நாம் செய்ததாகவும், இதனால் வருடம் ஒன்றுக்கு சுமார் 9 இலட்சம் ரூபாயை கல்லூரி சேமிக்கக்கூடியதாக இருக்கும்' என்றும் தெரிவித்தார்.

புனித மிக்கேல் கல்லூரியின் கனிஷ்ட பாடசாலைக்கும் தமது நிதியில் சூரிய மின்சார பிறப்பாகி ( roof-top solar panel system) பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கில் மேலும் பல பின்தங்கிய பாடசாலைகளுக்கும் தமது பழைய மாணவர் சங்கம் இதுபோன்ற சூரிய சக்தியில் மின்சாரம் பெறக்கூடிய வசதிகளை எதிர்காலத்தில் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, தமது செயற்பாடுகளுக்குத் தேவையான நிதிப்பங்களிப்பினைச் செய்த பழைய மாணவர்களுக்கும், தமது இந்தப் பணிக்கு பல வழிகளிலும் உற்சாகம் வழயங்கியவர்களும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் செயலாளர் அன்டன் கனேசமூர்த்தி கருத்துத் தெரிவித்தபோது, 'தமக்குக் கல்வி தந்த அந்தக் கல்லூரியின் 150 வருட நினைவு என்பது கல்லூரிக்கு மட்டுமல்ல, கிழக்கு மாணத்துக்கு மாத்திரமல்ல முழு இலங்கைக்குமே ஒளிமயமானதாக இருக்கவேண்டும் என்பதுதான் தமது விருப்பம் என்று தெரிவித்ததுடன், கல்லூரி மாணவர்களின் மேம்பாட்டுக்காக தமது பழையமாணவர் சங்கம் ஏராளமான வேலைத்திட்டங்களை கடந்த வருடத்தில் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்ற மின்சாரத் தடைகள், கட்டுக்கடங்காமல் செல்லும் மின்சாரச் செலவு போன்றனவற்றைக் கருத்தில் கொண்டு, புலம்பெயர் நாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்கள் இலங்கையிலுள்ள பாடசாலைகளை கூடியவரை சூரிய மின்சாரத்தில் செயற்படுகின்ற பாடசாலைகளாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபாடு காட்டவேண்டும் என்பதற்கு, கனடா பழையமாணவர்களின் இந்தச் செயற்பாடு ஒரு சிறந்த உதாரணம்.  
 

Leave a Reply