• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதுகாப்புடன் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல்

அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவிய பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதற்கு ஆளும் கட்சி மறுப்பு தெரிவித்ததால், முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி அவர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கலீதா ஜியா ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். கடந்த 16 மணி நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறியதாக தீயணைப்பு சேவை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு மற்றும் தேர்தல் செயலி செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் அங்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply