• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டனில் பெற்ற தாயாரை 41 ஆண்டுகள் தேடிய மகன்... இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியர் ஒருவர் தனது பெற்ற தாயாரை 41 ஆண்டுகள் தேடிய நிலையில், இறுதியில் அவரது உயிரற்ற உடலை லண்டன் இல்லத்தில் கண்டெடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஸ்டீவன் ஸ்மித் என்பவர் கடந்த 2021ல் தான் தனது பெற்ற தாயாரை லண்டனில் அவரது இல்லத்தில் கண்டுபிடித்துள்ளார். தாயாரை சடலமாக கண்டுபிடித்த நிலையில், தமது உண்மையான தந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

1980ல் தாம் பிறக்கும் போது தமது தந்தை சிறையில் இருந்ததாக மட்டும் தாம் தெரிந்து கொண்டதாக கூறும் ஸ்டீவன் ஸ்மித், தாம் யார் என்றும் எங்கே பிறந்தேன் என்பதும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டதாகவும், ஆனால் தற்போது தாம் தேடிய விடை கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு வேல்ஸில் பிறந்த ஸ்டீவன் ஸ்மித் பின்னர் தாயாருடன் லண்டனில் குடிபெயர்ந்துள்ளார். ஆனால் மிக விரைவிலேயே சிறார்கள் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து பிள்ளைகள் இல்லாத ஒரு இளம் தம்பதிக்கு அவர் தத்துக்கொடுக்கப்பட்டார்.

5 வயதாக இருக்கும் போது தத்தெடுத்த தந்தையும் விட்டுப்பிரிய, தத்தெடுத்த தாயார் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த தம்பதிக்கு பிள்ளைகள் சிலர் பிறக்க, தாங்கள் அனைவரும் எசெக்ஸ் பகுதியில் குடியேறியதாக ஸ்டீவன் ஸ்மித் நினைவுகூர்ந்துள்ளார்.

எசெக்ஸ் பகுதியில் திருமணம் செய்து கொண்ட ஸ்டீவன் ஸ்மித் 4 பிள்ளைகளுக்கு தந்தையானார். ஆனால் தமது உண்மையான பெற்றோர் யார் என்பதை தெரிந்துகொள்ள மிகுந்த ஆவலாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ல் டிஎன்ஏ சோதனை முன்னெடுத்ததன் மூலமாக தனது சகோதரர் ஒருவரை கண்டுபிடித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சகோதரி ஒருவரையும் சந்திக்க, அவருக்கு தெரிந்த தகவலின் அடிப்படையில் 2021ல் தமது உண்மையான தாயாரை கண்டுபிடித்ததாக ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அப்போது கோவிட் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த வேளை. ஒருவழியாக அவரது குடியிருப்பு முகவரியைத் தேடி கண்டுபிடித்து, வீட்டுக்கு சென்றபோது, குளியலறையில் அவர் சடலமாக கிடந்ததை ஸ்டீவன் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

தாம் அவருக்கு மூத்த மகன் என்பதையும் தமக்கு மூன்று சகோதரிகளும் நான்கு சகோதரர்களும் இருப்பதை பின்னர் தெரிந்து கொண்டதாகவும் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சிலர் வேல்ஸில் குடியிருப்பதாகவும், சிலர் அமெரிக்காவிலும் சிலர் கென்ட் பகுதியில் குடியிருப்பதாகவும் தெரிந்து கொண்டதை ஸ்டீவன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply