• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒப்பனை பொருள் விற்பனையில் முதலிடம் பெற்ற கோடீசுவரி

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வணிக, பொருளாதார, பங்கு சந்தை ஊடகம், ப்ளூம்பர்க் (Bloomberg). இந்நிறுவனம், உலகின் முன்னணி கோடீசுவரர்களை, அவர்களின் நிகர சொத்து மதிப்பை வைத்து உருவாக்கும் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம்.

இப்பட்டியலின்படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேஷன் ஆடை மற்றும் ஒப்பனை துறையில் முன்னணியில் உள்ள லோரியல் (L'Oreal) நிறுவனத்தின் தலைவரான, 70 வயதாகும் ஃப்ரான்காய் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers), 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணியாக இடம் பிடித்துள்ளார்.

மேயர்ஸ், உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ள 268 பில்லியன் டாலர் நிறுவனமான லோரியல் தலைமை பொறுப்பை அவரது இரு மகன்களுடன் நிர்வகித்து வருகிறார்.

கிறித்துவ மக்களின் புனித நூலான பைபிள் குறித்து 5 பாகங்கள் மற்றும் கிரேக்க கடவுள் குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ள மேயர்ஸ், பல மணி நேரங்கள் இடைவிடாது பியானோ வாசிக்கும் திறன் படைத்தவர்.

2017ல் தன் தாயிடமிருந்து லோரியல் நிர்வாக பொறுப்பை ஏற்ற மேயர்ஸ், இன்று வரை திறம்பட நிர்வகித்து வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் ஒப்பனை பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தாலும், சில மாதங்களிலேயே விற்பனையை பல மடங்கு உயர்த்தி காட்டினார், மேயர்ஸ்.

தற்போது உலகின் முன்னணி கோடீசுவரர்களில் 12வது இடத்தை பிடித்துள்ளார் மேயர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

சேனல், யூனிலீவர், ரெவ்லான் என இத்துறையில் பல போட்டி நிறுவனங்கள் இருந்தாலும், ஒப்பனை, சரும பாதுகாப்பு, சிகை பாதுகாப்பு, சிகை நிறம் கூட்டுதல் மற்றும் ஆண்கள் ஒப்பனை என பல கிளைகளில் விற்பனையை விஸ்தரித்து நம்பர் 1 இடத்தில் லோரியல் நிறுவனத்தை மேயர்ஸ் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1909ல் மேயர்ஸின் தாத்தா யூகின் ஷுயல்லர் (Eugene Schueller) என்பவர், தான் கண்டுபிடித்த தலை சாயத்தை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம், லோரியல் இன்று உலகெங்கும் கொடி கட்டி பறக்கிறது.
 

Leave a Reply