• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கலைஞனை உருவாக்கிய கட்டபொம்மன்!

சினிமா

வீரபாண்டிய கட்டபொம்மன் : நம் நடிகர் திலகம் சிங்கம் போல் கர்ஜிக்க ,கலைஞனை உருவாக்கிய கட்டபொம்மன்!
“வானம் பொழியுது.. பூமி விளையுது.. உனக்கேன் வரி கட்டவேண்டும்? தானமாகக் கேள்.. தருகிறேன். வரி என்றால் தரமாட்டேன்” என்ற வசனத்தை கம்பளத்தார் கூத்தில் கட்டபொம்முவின் கதையைக் கேட்டு, பார்த்து ஏழு வயதில் பேசிக் காட்டியவன் கணேசமூர்த்தி. அன்று முதல் தன்னைக் கட்டபொம்மனாக நினைத்துக் கனவு காணத் தொடங்கினான்.
24 வருடங்களுக்குப்பின் அக்கனவு பலித்தது. தமிழகத்தின் மேடைகளிலும் பம்பாய் போன்ற நகரங்களிலும் 116 முறையும் தமிழ்த் திரையில் ஒருமுறையும் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமிட்டு, தனது சிம்மக் குரலால் வசனங்களைப் பேசி கர்ஜனை செய்தார் சிவாஜி கணேசன்.
கம்பளத்தார் கூத்து
கம்பளத்தார் கூத்து என்பது, வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டபின் அவரது வழித்தோன்றல்கள், தங்கள் முன்னோர்கள் பற்றி, குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு வரிகொடுக்க மறுத்து தூக்கிலிடப்பட்டது (1799) குறித்துப் பாடலும் இசையும் கலந்து தங்களுக்குள் பாடி, ஆடி மகிழ்ந்தனர். அக்கூத்துக்குத் தமிழ்நாட்டில் நடைபெறும் திருவிழாக்களில் பெரும் வரவேற்பு இருந்தது.
அப்படி, திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நடந்த கம்பளத்தார் கூத்தைத்தான் சிறுவன் கணேசமூர்த்தி (சிவாஜி கணேசன்) பார்த்து, தானும் கட்டபொம்மனாக மேடையில் தோன்ற வேண்டும், அவரைப் போல் மனஉறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என உறுதி பூண்டு 219 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த கட்டபொம்மனை 64ஆண்டுகளுக்குமுன் (1959) மீண்டும் திரையில் உயிர்பெறச்செய்தார். இன்றைய தலைமுறைக் கட்டபொம்மனைக் காண வேண்டுமானால், அவரது விரிவான வரலாற்றைப் படிப்பதுடன் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தைப் பார்ப்பதன் மூலம், கட்டபொம்மன் என்ற வீரன் எப்படி வாழ்ந்திருப்பான் என்பதை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
நாடக நடிகராக..
கட்டபொம்மன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்க கணேச மூர்த்தி கடந்துவந்த பாதை, கலை தாகத்தால் கட்டி எழுப்பப்பட்டது. 1935-ல் தனது ஏழாம் வயதில் மதுரை ஸ்ரீ பாலகான சபாவில் நடிகராகச் சேர்ந்தார்.
பத்தே வருடங்களில் நாடக உலகில் தனியிடத்தைப் பெற்ற அவர், 1945-ல் மதராஸில் நடைபெற்ற 7-ம் சுயமரியாதை மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் 90 பக்க வசனங்களைத் திறம்படப் பேசி நடித்து, ஈ.வெ.ரா. பெரியாரால் ‘சிவாஜி’ என்ற பட்டம் பெற்றார்.

பல நாடகங்களில் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலைக் கண்ட வேலூர் பட அதிபரான ‘நேஷனல் தியேட்டர்’ பெருமாள் முதலியார், ஏவி.மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து, கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் தயாரித்த ‘பராசக்தி’ படத்தின் மூலம் 1952-ல் திரையுலகில் கதாநாயகனாகத் தடம் பதித்தார் சிவாஜி கணேசன். 1954-ல் வெளிவந்த ‘மனோகரா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனியிடம் பிடித்தபின் தன் கனவை நனவாக்க முடிவெடுத்தார்.
கம்பளத்தார் கூத்து நாடகமான வரலாறு
1954-ல் நாடகாசிரியரும் கதை, வசனகர்த்தாவுமான சக்தி கிருஷ்ணசாமியை ‘கம்பளத்தார் கூத்தினையும் கட்டபொம்மன் வரலாற்றினையும் தழுவி ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தை சிவாஜி எழுதச்சொன்னார். சிவாஜி நாடக மன்றம் என்ற நாடகக்குழுவைத் தொடங்கி 1955 முதல் 1957 வரை இரண்டு ஆண்டுகள் ஒத்திகை நடத்தினார். 1957 ஆகஸ்ட் 28-ம் நாள் சேலம் நகராட்சியில் நடந்த அரசுப் பொருட்காட்சியில் அறிஞர் மு.வரதராசனார் தலைமையில் ‘கட்டபொம்மன்’ அரங்கேற்றம் செய்யப்பட்டுப் பெருவெற்றி பெற்றது.
சேலம் நகராட்சியினர் தொடர்ந்து ஒன்பது நாட்களும் நாடகத்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டனர். அரங்கேற்றத்துக்குத் தலைமையேற்ற அறிஞர் மு.வ., “வீரபாண்டியனின் வீர வரலாற்றை நாடகமாக்கிய சக்தி கிருஷ்ணசாமியின் தொண்டு நல்ல தொண்டாகும். சிவாஜி கணேசன் வீரபாண்டியனாக வேடம் ஏற்றது நல்ல தெரிவாகும். நாடகம் உருவான முதல் நாளே காணும் பேறு பெற்று மகிழ்ந்தேன்” என்று பேசினார்.
சென்னையில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தின் முடிவில் தலைமை உரை நிகழ்த்தும் அறிஞர் அண்ணா. அவரின் பின்னால் நிற்பவர் ‘சக்தி’ கிருஷ்ணசாமி, வலப்புறம் சிவாஜி கணேசன்.
தென்னகத்தின் மார்லன் பிராண்டோ
சென்னையில் நடந்த நாடகத்துக்குத் தலைமையேற்ற அறிஞர் அண்ணா, “உலகில் மிகச் சிறந்த நடிகராக சிவாஜியைக் கருதலாம். மேல்நாட்டு நடிகர்களில் மார்லன் பிராண்டோ ஒருவர் மட்டும் முயன்றால் கணேசனைப் போல் நடிக்க முடியும்.” என்று பேசினார். பம்பாயில் நாடகத்தைப் பார்த்த நடிகர் ராஜ் கபூர், “நானும் என் குடும்பத்தினரும் நாடக மேடையிலேயே வாழ்பவர்கள். என் தந்தை நடிக்காத நாடகம் இல்லை. ஆனால், சிவாஜியின் நாடகம் என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. இந்தியாவில் எல்லாக் கலைஞர்களையும் சிவாஜி வென்றுவிட்டார்” என்று பேசினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் குறித்து அனைத்து நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் பாராட்டி விமர்சனங்கள் எழுதின. 116 முறை இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்து வசூலான தொகையில் அனைத்துச் செலவுகளும் போக மீதமான 32 லட்சம் ரூபாயை 1962-ல் தமிழகக் கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்து கலையால் கிடைத்த பொருளைக் கல்விக்குக் கொடுத்து கலைஞர்களின் கலைஞனாக உயர்ந்தார் சிவாஜி கணேசன்.
திரை வடிவமும் போட்டிகளும்
கட்டபொம்மன் நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதைத் திரைப்படமாக்க பி.ஆர்.பந்துலு முடிவு செய்தார். ஆனால், ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ‘ஜெமினியின் அடுத்த தயாரிப்பு கட்டபொம்மன் வரலாறு’ என்ற விளம்பரத்தை வெளியிட்டார். சிவாஜி கணேசன் வாசனைச் சந்தித்து அத்திட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். அடுத்து, கவிஞர் கண்ணதாசன் மருது சகோதரர்களின் வரலாற்றை ‘சிவகங்கைச் சீமை’ என்ற தலைப்பில் கட்டபொம்மன் படத்துக்குப் போட்டியாக எடுக்கத் தொடங்கினார்.
கட்டபொம்மன் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரைத் தேர்ந்தெடுத்தார் பந்துலு. கட்டபொம்மன் கதையில் வெள்ளயத் தேவனாக நடிக்கவிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் ‘சிவகங்கைச் சீமை’ படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். சிவாஜி உடனே சாவித்திரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளயத் தேவனாக நடிக்க ஜெமினி கணேசனை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஜெமினிகணேசன் ஜெய்ப்பூர் வந்துசேர்ந்தார். படப்பிடிப்பு வெகு வேகமாக நடந்து முடிந்தது.
மக்களின் மனங்களை வெல்லப்போவது ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னா அல்லது ‘சிவகங்கைச் சீமை’யா என்று பேசத் தொடங்கினார்கள். ‘சிவகங்கைச் சீமை’ படத்தைப் பார்த்த நாடகக் கலைஞர் ஒளவை சண்முகம், “வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை சிவகங்கை சீமை முறியடித்துவிடும்” எனக் கூறினார். ஏவி. மெய்யப்ப செட்டியார், “இரண்டு படங்களையும் பார்த்தேன். ஒன்றுக்கொன்று போட்டிப் படங்களல்ல, ஒரே வரலாற்றின் தொடர்ச்சி. எனவே, வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிவந்து 50 நாட்கள் ஆனபின் ‘சிவகங்கைச் சீமை’ யை வெளியிட்டால் இரு படங்களுமே வெற்றிபெறும்” என்றார்.
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ 1959 மே 6-ம் தேதி வெளிவர, ‘சிவகங்கைச்சீமை’ அதே வருடம், அதே மாதம் 19-ம் தேதி வெளிவந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை வெள்ளிவிழாப் படமாக்கிய பெருமை சிவாஜி கணேசன் ஒருவரை மட்டுமே சாரும். காரணம் வரலாற்றின் பக்கங்களில் மறைந்துபோயிருந்த கட்டபொம்மனை அறியாத தலைமுறைக்கு உயிருடன் எழுப்பிக்காட்டினார். சிவாஜி என்ற நடிகன் படத்தின் எந்த இடத்திலும் முகம் காட்டவில்லை.
படத்தின் வெற்றிக்குக் காரணம் சிவாஜி மட்டுமே என்று பத்திரிகைகள் புகழாரம் சூட்டியபோது சிவாஜி சொன்னார். “அதெல்லாம் கட்டபொம்மன் எனக்குக் கொடுத்த சிறப்பு. ஏழு வயதில் என்னுள்ளே புகுந்து, நான் கட்டபொம்மன் ஆக வேண்டும் என்ற ஆர்வத்துக்கும், அதை வளர்த்துக்கொள்ள நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் கிடைத்த பரிசு” என்றார். உண்மைதான்.. ஒரு வீர வரலாறு உருவாக்கிய மாபெரும் கலைஞன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
கட்டுரையாளர், சிவாஜி கணேசனின் கலை வாழ்வை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழர் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர்.
 நன்றிகள் டாக்டர் மருதுமோகன் மற்றும் தி ஹிந்து தமிழ் நாளிதழ்

 

Leave a Reply