• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கணவன் மறைந்த பிறகும் மனைவிக்கு வாழ்க்கை உண்டு!

சினிமா

திரைப்படம்:நண்டு

வருடம்:1981

கதை:'நண்டு',நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.ஆசிரியர்,திருமதி சிவசங்கரி

ஒளிப்பதிவு:அசோக்குமார்

திரைக்கதை,வசனம்,இயக்கம்:

மகேந்திரன்

பட நீளம்:110நிமிடங்கள்

இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மிகச்சிறந்த திரைப்படம்,'நண்டு'.

அன்றைய காலகட்டங்களில் ஒண்டுக்குடித்தனங்களை களமாக வைத்து நிறைய படம் எடுத்துள்ளனர்.

ஒண்டுக்குடித்தனம்னா ஒரே காம்பவுண்டில் நாலைந்து வீடுகள் இருக்கும்.அந்த நான்கைந்து வீடுகளுக்கும் ஒரே கழிப்பறை குளியலறைதான்.அன்றைய நடுத்தர மக்களுக்களின் பெரும்பாலானோர் வீடு இந்த செட்டப்தான்.ஒருவர் வீட்டில் நடப்பது இன்னொரு வீட்டில் தெளிவாகத் தெரியும்.எந்த ரகசியத்தையும் மூடி மறைத்து விட முடியாது.ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்த காலமது.

அந்த ஒண்டு வீட்டு குடித்தனத்தின் சுவாரஸ்யமே தனிதான்.

1980-90 காலகட்டங்களில் இதையே களமாக வைத்து சில படங்கள் எடுத்தார்கள்.எனக்கு சட்டென்று நினைவிற்கு வருவது பயணங்கள் முடிவதில்லை,சந்தியாராகம்தான்.அந்த வரிசையில் நண்டு படமும் சேர்கிறது.

ராம்குமார் சர்மா வடஇந்தியன்.உத்தரப்பிரதேசத்தில் லக்னோ எனும் ஊரைச் சேர்ந்தவன்.இன்ஜினியர்.வசதியான குடும்பம்.அப்பா ஆணாதிக்க மனோநிலை கொண்டவர்.பாசமில்லாத ஒரு மனிதன்.அம்மா கணவனுக்கு பயந்து நடுங்குபவள்.

ராம்குமாரின் உடன்பிறந்தோர்-அண்ணன்,தம்பி,தங்கை.

அப்பா ஒரு பெண்ணை காண்பித்து கட்டிக்கொள்ள வற்புறுத்துகிறார்.அவன் மறுக்கிறான்.வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறான்.தன்னுடைய விருப்பத்திற்கு சம்மதிக்காத காரணத்தால் வீட்டைவிட்டு விரட்டுகிறார்.அம்மா,தங்கை,தம்பி தடுத்தும் அவனை வீட்டை விட்டு விரட்டுகிறார்.

ராம்குமார் சிறுவயது முதலே ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறான்.சென்னைக்கு வருகிறான்.ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான்.சீதா (உதிரிப்பூக்கள் அஸ்வினி)அவன் வேலைப் பார்க்கும் நிறுவனத்திலேயே பணிபுரிகிறாள்.

சீதா குடியிருக்கும் ஒண்டுகுடித்தன வீட்டிலேயே மாடியில் குடியிருக்கிறான்.அந்த வீட்டில் வதவதன்னு சில வயதுப் பெண்களும் இருக்கிறார்கள்.எல்லோருக்குமே அவன் மேல் ஆசை.

சாமிக்கண்ணு அந்த வீட்டின் உரிமையாளர்.வெண்ணிறஆடை மூர்த்தி வாடகைக்கு குடியிருப்பவர்.இரண்டு பேரும் வாயைத் தொறந்தாலே நமக்கு சிரிப்புதான்.

மகேந்திரன் அவர்களின் படங்களின் பெரும்பாலானவற்றில் இவர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

செந்தாமாரையும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.மிகச் சாதாரணமான காட்சியைக் கூட தன்னுடைய அழகான நடிப்பால் உடல் மொழியால், வசன உச்சரிப்பால் அந்தக் காட்சியை மிகச் சிறந்த காட்சியாக உருவாக்கிவிடுவார்.

சீதாவின் அம்மா விதவைத்தாய்.அக்காவுக்கு கல்யாணமாகிவிட்டது.அக்காவின் கணவன் அவளை அடிப்பதையே ஒரு வேலையாக வைத்திருப்பவன்.

அவன் அந்த வீட்டிற்கு வந்த நாள்முதல் வீட்டு உரிமையாளரின்(சாமிக்கண்ணு)மகள்(வனிதா)அவனை தன் வலையில் விழ வைக்க பல வகைகளில் முயற்சிப்பாள்.அவன் office கிளம்பும் நேரம் பார்த்து அழகான பாவாடை தாவணி அணிந்து கொண்டு கூடத்தில் வலம் வருவாள்.அவன் அவளை கண்டுகொள்ளவே மாட்டான்.அவளுடைய தாயாருக்கும் தன் மகளுக்கு அவனை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற ஆசையுள்ளது.அவனுடைய மனமோ எளிமையான சீதாவை(அஸ்வினி) நோக்கியே செல்லும்.

இந்தப் படத்தில் ரொம்ப interesting-ஆன ஒரு scene ஒண்ணு இருக்கு.

வடஇந்தியர்கள் கொண்டாடும் ரக்சாபந்தன் விழாஅன்று,வெண்ணிற ஆடைமூர்த்தி கூடத்தில் இருக்கும் பெண்களிடம் சென்று ராம்குமார் குடுத்துச் சென்ற ரக்சாபந்தன் கயிறை அவர்களிடம் கொடுத்து அவன் கையில் கட்டச் சொல்வார்.ஒருத்தி கூட அவன் கையில் ராக்கி கயிறு கட்ட விரும்பமாட்டார்கள்.

எல்லோருமே அவனையே நினைச்சுக்கிட்டு இருக்கும்போது அண்ணனா ஏத்துப்பாங்களா?

ராம்குமாரை தன் வலையில் விழவைக்கும் நினைக்கும் வனிதா, வேண்டுமென்றே அஸ்வினியிடம் சென்று, "இந்த ராக்கி கயிறை அவர் கையில் கட்டுங்க",என்பாள்.சிறிது நேரம் யோசித்த அவள்,அந்த ராக்கி கயிறை வாங்கிக் கொண்டு ராம்குமார் சர்மாவின் அறைக்கு செல்வாள்.தான் வந்த நோக்கத்தை சொல்வாள்.

அவன்,"என்னெ நீங்க அண்ணனா ஏத்துக்க ஒங்க மனசு இடம் குடுத்துச்சுன்னா கட்டுங்க.இல்லைன்னா அந்த பொம்மை கழுத்துல கட்டுங்க",என்பான்.

அவன் புன்முறுவலோடு அந்த பொம்மையின் கழுத்தில் கட்டிவிட்டு செல்வாள்.நல்லதொரு காட்சியது.

ராம்குமாருக்கு ஆஸ்துமா வியாதி இருப்பது தெரிந்தும் அவனையே திருமணம் செய்து கொள்கிறாள்.குறைகளோடு அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான காதல்.திருமணம் ஆகி குழந்தை ஒன்று பிறந்த பிறகு சீதா அவனுடைய அம்மா அப்பாவை சந்திக்க ஆசைப்படுகிறாள்.

முதலில் மறுத்த அவன், பிறகு அவளுடைய வற்புறுத்தலின் பேரில் தனது வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்கிறான்.

அம்மா,தம்பி,தங்கை அவனை அன்போடு வரவேற்கிறார்கள்.

அப்பாவும்,அண்ணனும் அவனை அவமானப்படுத்தி திருப்பியனுப்புகிறார்கள்.

இப்போ ஆஸ்தூமா நோய் அவனுக்கு புற்றுநோயாக உருவெடுக்கிறது.அவனை குணப்படுத்த போராடுகிறாள் அவனுடைய மனைவி..........முடிவு?

'அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா

சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா!'

'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே',

-என்ற அற்புதமான இரண்டு பாடல்கள் இந்தப் படத்தில்தான்.

'அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா!:

-என்ற பாடலை இயக்குனர் யார் கண்ணன் எழுதியது.அவர் இந்தப்படத்தின் உதவி இயக்குனரும் கூட.

'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே'பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார்.

இந்தப் படத்துல நெஞ்சுல தைக்கற மாதிரி ஒரு அரை வரி வசனம்,'புருஷனும் ஒரு வழிப்போக்கன்தான்'.

க்ளைமாக்ஸ் காட்சிக்கு இந்த வசனம் மிகப்பொருத்தமாக இருக்கும் .

இத்திரைப்படத்திற்கான காணொளி விமர்சனத்தையும் கமெண்ட்பாக்ஸில் பதிவிட்டுள்ளேன்.அதையும் பாருங்கள்.பிடித்திருக்கும் பட்சத்தில் சேனலை Subscribe செய்யுங்கள்.

மற்றவர்களின் சேனலை Subscribe செய்வதால் நமக்கு எவ்வித இழப்பும் ஏற்படப்போவதில்லை.

நான் பிறரின் சேனலுக்குள் நுழையும் பொழுதே Subscribe செய்துவிட்டுத்தான் நுழைவேன்.இச்செயல் அவர்களின் உழைப்பிற்கு, நான் கொடுக்கும் மரியாதையாக நினைக்கிறேன்.

நன்றி,வணக்கம்.

சே மணிசேகரன்

Leave a Reply