• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தந்தையின் பெயரை காப்பாற்றிய நடிகர் பிரபு

சினிமா

1976ல் காளிச்சரண் என்கிற படம் ஹிந்தியில் வந்தது. இரு வேடங்களில் சத்ருக்கன் சின்ஹா நடிக்க படம் செம ஹிட்.  
அதேப்போல 1978ல் அமிதாப் நடிக்க முக்காதர் கா சிக்கந்தர் என்கிற படமும் வந்தது. 
இந்த இரண்டு படத்திலும் ஹீரோவை தவிர வேறொரு பாத்திரமும் பேசப்பட்டதாக அமைந்தது. 1981ல் அமிதாப் படம் மு.கா.சிக்கந்தர் தமிழில் அமரகாவியம் என எடுக்கப்பட்டது. அமிதாப் படத்தில் திலாவர் ரோல் பேசப்பட்ட பாத்திரம். ஹிந்தியில் அம்ஜத் கான் நடித்த பாத்திரம். படத்தின் இயக்குனர் அமிர்தம் பிரபுவை அறிமுகப்படுத்தலாம் என சொல்ல சிவாஜியோ பதிலேதும் சொல்லவில்லை. ஆனாலும் சிவாஜி படத்தின் நாயகன் என்பதால் பிரபு பேசப்படும் பாத்திரமாக மாறுவாரோ என பயந்தார்.
மேலும் பிரபுவை நடிகனாக்க வேண்டாம். போலீஸ்காரனாக வேண்டும் என்கிற ஆசை சிவாஜிக்கு இருந்தது. அதனாலேயே ஸ்ரீதர் படத்தின் டீன் ஏஜ் நாயகனாக நடிக்க கேட்டும் சிவாஜி மறுத்து விட்டார். திலாவர் ரோலை டைகர் பிரபாகர் அமரகாவியம் என்கிற அப்படத்தில் செய்தார்.

ஆனால் காளிச்சரண் படக்கதாபாத்திரமான ஷாக்கா பாத்திரம் டேனி டென்ஸொங்பாவின் ஆக்ரோஷ நடிப்பில் சூடேறியது. டேனியின் முகத்தில் கோபம், வெறுப்பு என்பதெல்லாம் அனாயாசமாக வரும். ஷோலே கப்பர்சிங் கதாபாத்திரத்தை மிஸ் செய்தவராச்சே. காளிச்சரண் படத்தின் தமிழாக்கம் 82ல் சங்கிலி என்கிற பெயரில் எடுக்கப்பட்ட போது ஷாக்கா கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் தேட வேண்டி வந்தது இயக்குனர் சி.வி.ராஜேந்திரனுக்கு. பிரபு சினிமா எடிட்டிங் பயிற்சிக்கு போய்க்கொண்டிருந்த காலம். சிவாஜியிடம் நேரிடையாக ஷாக்கா பாத்திரம் பற்றி சொல்லி பிரபுவை நடிக்க கேட்க சிவாஜி மறுத்து விடுகிறார். உடனே ராஜேந்திரன் ஓடியது சிவாஜியின் தம்பி சண்முகத்திடம். சண்முகம் சிவாஜியை கன்வின்ஸ் செய்ய சங்கிலி படத்தின் 'ராஜாளி' பாத்திரத்தை பிரபு நடிக்க உறுதியானது. 
முதல் படம் தந்தையோடு. அதுவும் தந்தை இரட்டை வேடத்தில். சிவாஜியை எதிர்த்து அவரோடு மோதும் எதிர் நாயகன் கதாபாத்திரம். அதுவும் ஒரு கால் இல்லாமல் ஒற்றைக்காலில் சிவாஜியோடு சண்டை வேறு செய்ய வேண்டும். தெலுங்கில் மோகன்பாபு செய்த அந்த ரோலை பிரபு நன்றாகவே நடித்தார். மலையாளத்தில் பாலன் கே.நாயர்....
சங்கிலி படம் ரிலீசான போது அதன் மௌத் டாக் முழுவதும் சிவாஜி மகன் சங்கிலியில் நடித்திருக்கிறார் என்பது தான். சிவாஜியை விட பிரபுவை பார்க்கவே அரங்கங்கள் நிறைந்தன.
அப்படித்தான் பிரபு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 82ல் சங்கிலிக்கு பிறகு இயக்குனர் துரையின் நலந்தானா, இயக்குனர் ராம.நாராயணின் சின்னஞ்சிறுசுகள், தேவர் பிலிம்ஸ் தியாகராஜனின் அதிசயப்பிறவிகள், இயக்குனர் மணிவண்ணனின் லாட்டரி டிக்கெட், இயக்குனர் கங்கை அமரனின் கோழி கூவுது போன்ற படங்கள் வெளிவந்தன. கோழி கூவுது அதிரி புதிரி ஹிட்டானது. அதிசயப்பிறவிகளும் நன்றாக ஓடியது.
அதிசயப்பிறவிகள் படத்தில் அன்று நான்கு ஹீரோ, நான்கு ஹீரோயின் நடிக்க படம் பக்கா கமர்ஷியல் தாறுமாறு. பிரபு-ராஜலட்சுமி, கார்த்திக்-ராதா, எஸ்.வி.சேகர்-அருந்ததி, ஒய்.ஜி.எம்-வனிதா என படம் பேசப்பட்டதாக இருந்தது. கோழி கூவுது படத்தில் சுரேஷுடன் நடித்தாலும் பிரபுவுக்கு தான் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. பிரபுவின் பப்ளி உடலும், குழந்தை முகமும் சிவாஜியை பிடிக்காத எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குக்கூட பிடிக்கும்படி பிரபுவை கொண்டு சேர்ததது.
நலந்தானா படத்தில் நடிக்கும் போது பிரபு ரீடேக் மேல் ரீடேக் வாங்கினார். பிரபுவின் சொதப்பலான நடிப்பால் துரை டென்ஷனானார். ஆபத்பாந்தவனாக அங்கு வந்த ரஜினி ஒருஅட்வைசும் கொடுத்தார். நடிக்கும் போது எதிரே நிற்பவரின் கண்ணை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து விட்டு நடி. ஷாட் ஓக்கேயாகும். அதன் படி நடிக்க ஷாட் ஓகே. பிரபு வளரும் நடிகரானார். தன் தந்தையோடு நீதிபதி போன்ற படத்தில் தொடர பல படங்களில் இணைந்து நடித்தனர்.
பிரபுவை தமிழ் ரசிகர்கள் ரசித்தாலும் மற்ற நடிகர்களை விட கூடுதல் நேசம் வைத்தது அவர் சிவாஜி மகன் என்பதற்காக தான். பிரபு எண்ணற்ற ஹிட்டுகள் தந்தாலும் சில காலம் கழித்து அவர் படங்கள் தோற்ற போதும் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்த பிரபு சட்டென தன் ஹீரோ இமேஜை விட்டு விட்டு கேரக்டர் ரோல் செய்ய ஆரம்பித்தது நல்ல மாறுதலாக வந்தது. மேலும் தயங்காமல் இளம் ஹீரோக்களோடு நடித்தது அவரை ஃபீல்டில் நிற்க வைத்தது. அஜித்தோடு பில்லா, சூர்யாவோடு அயன், ஜெயம் ரவியோடு சம்திங் சம்திங் என தன் அடுத்த இன்னிங்ஸை வெற்றியோடு தொடர்கிறார். 
சின்னதம்பி என்கிற மெகாஹிட் தந்ததெல்லாம் மலையேறிப்போச்சு. அதை நன்றாகவே உணர்ந்தவர் பிரபு. இடையில் தன் தந்தையின் பெயரும் கெடாமல் நடிக்க வேண்டும்...
அதை அழகாக கொண்டு செல்பவர் பிரபு...
பிரபு...தி கிரேட்....ஜூனியர் சிவாஜி

 

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்
 

Leave a Reply