• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவையான, அருமையான குறும்படம் செந்தீ -ரவி தமிழ்வாணன்

கனடா

கனடா திரு.செந்தியின் முக்கியமான, சுவையான, அருமையான
குறும்படம் "செந்தீ!”
-ரவி தமிழ்வாணன்

திரு.செந்தியை கடந்த கால் நூற்றாண்டாக நானறிவேன். பன்முகத் திறமை கொண்டவர். இதுவரை நான் 15 முறை கனடாவிற்கு சென்றிருக்கிறேன். இப்பயணங்களின் போதெல்லாம் திரு.செந்தியை சந்திப்பதற்கும், அவருடன் நேரம் செலவிடுவதற்கும் நான் தவறியதே இல்லை. சில வருடங்களுக்கு முன்பு மகாகவி பாரதியைப்போல இவர் வேடம் தரித்தபோது, மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று அண்ணன் திரு.லேனா தமிழ்வாணனும், நானும் பேசிக் கொண்டோம்.

கவிப்பேரரசு வைரமுத்து இவருக்கு அளித்த “செயல்வீரர் செந்தில்” பட்டம் மிகவும் பொருத்தம். கனடாவில் ஒட்டாவா, மிசிசாகா, ஸ்கார்பரோவில், தமிழர் திருவிழா போன்ற பல இடங்களில் மணிமேகலைப் பிரசுர புத்தகக் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறேன். அவற்றுள் இவர் ஏற்பாடு செய்து நடத்திய புத்தகக் கண்காட்சியில்தான் எங்களின் விற்பனை உச்சம். எனவே இவர் செயல் வீரர் என்பதை நான் மனப்பூர்வமாக வழி மொழிகிறேன்.

“பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம்” என்று இவர் எழுதிய புத்தகத்தையும், இவர் தந்தை திரு.அ.பொ.செல்லையா அவர்கள் எழுதிய "குறளின் குரல்" நூலின் பல பாகங்களையும், பள்ளி ஆசிரியையாக சிறப்பாக பணி செய்த இவருடைய தாயார் திருமதி.செல்லையா எழுதிய “திருக்குறளும் ஆங்கில விளக்கமும்" என்ற பருமனான நூலையும் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். ஆக, மொத்தக் குடும்பமே எழுத்தாளர்கள்தாம்!.

1990களில் இவர் வெளியிட்ட “தமிழன் வழிகாட்டி” என்ற மெலிதான நுாலைப் பார்த்து புதுமையான, வித்தியாசமான முயற்சியாக இருக்கிறதே! என்று அப்போதே நான் பாராட்டினேன். இந்தப் புத்தகம் பல பதிப்புகளைத் தாண்டி பருமனான நூலாகத் தொடர்ந்து வெளிவருவதோடு, ஆன்லைனிலும் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இப்போது இவர் புதிய அவதாரம் எடுத்திருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இவருடைய புதிய முயற்சியாக ‘செந்தீ' என்ற தன் பெயரையே நேசித்து, நீட்டித்து நெருப்பான இருக்கிறது. கருவுடன் இவர் தயாரித்துள்ள குறும்படம் மிகவும் நன்றாக 40 வருடங்களாக கனடாவில் வசித்த பிறகு, யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இறங்குவதில் இருந்து தொடங்கும் இந்தக் குறும்படம், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளை பார்ப்பதற்கு வாய்ப்புத் தருகிறது.

கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் தமிழகத்தின் டி.ராஜேந்தரைப்போல பொறுப்பெடுத்து செய்திருப்பது பாராட்டிற்குரியது. கனவு காணாதீர்கள்! என்று ஒரு பெண்மணியின் முன்னுரையாகச் சொல்லி இதன் தொடர்ச்சியாக கனவுக் காட்சியைத் தந்திருப்பது புதிய உத்தி! கொலை செய்யும்பொழுது உரியவர் வேறு ஒரு இடத்தில் இருப்பதை Alibi என்று ஆங்கிலத்தில் சொல்வர். அழகு நிலையம், திரையரங்கம், திருவிழா, துணிக்கடை போன்ற இடங்களிலிருந்து வெளியேறிச் செல்வதாகக் காட்டியிருப்பது இதனை நிரூபிக்கிறது. குடுகுடுப்பைக்காரர், ஆட்டோ ஓட்டுனர், சார்லி சாப்ளின், நர்ஸ், உள்ளூர் தாதா என பலவித தோற்றத்தில் இவர் வருவது ஒருபுறம் சிறப்பு என்றாலும் பொருத்தமாக இருக்கிறது என்பதும் முக்கியமானது.

சட்டத்தரணி, பெருந்தலைவர் திரு.அனந்தநிதி, கஞ்சா விற்பனையாளர் போன்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்களும் தம் பணியை இயல்பாகச் செய்திருக்கிறார்கள் என்பதை அவசியம் குறிப்பிட வேண்டும். திரு.செந்தி ஸ்கூட்டி, குதிரை சாரட்டு வண்டி, லாரி என அனைத்தையும் லாவகமாக ஓட்டுவது இவர் சகலகலாவல்லவன் என்பதைச் சொல்கிறது. யானையில் சவாரி, படகில் பயணம், வள்ளுவர் வேடத்தில் மடிக்கணினியில் இயக்குவது, காட்சிகளுக்கு சுவையைக் கூட்டுவதோடு நம்மையும் ஒன்றிப் போகச் செய்கிறது.

25 நிமிடங்களில் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் தீமைகளை களையெடுப்பதாக கதையின் கருவை அமைத்திருப்பதுடன், காவல் துறையின் பாராட்டைப் பெறுவதாக படத்தை முடித்திருப்பதும் புதுமை.

கனடாவிலிருந்து பல்லாயிரம் கி.மீ பயணித்து தாய் மண்ணுக்கு வந்து நிறைய பொருட் செலவில் ‘செந்தீ’யை தயாரித்திருக்கும் திரு.செந்தியை வெகுவாகப்
பாராட்டி இக்கருத்துரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நன்றி.

அன்புடன்,
ரவி தமிழ்வாணன்
 

Leave a Reply