• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளியுறவுக் கொள்கையில் விரைவில் மாற்றம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கை

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற வர்ணங்கள் வழங்கல் மற்றும் விடுகை அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதுவரையில் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக செயற்பட்டு வருகின்றோம்.

அதனை நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஒட்டுமொத்த அங்கமாக நாம் கருதவில்லை.

இது நமது வெளியுறவுக் கொள்கை மற்றும் நமது பாதுகாப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

நாட்டின் புதிய வெளியுறவுக் கொள்கையில், அமைதி காத்தல், காலநிலை மாற்றம், சர்வதேச உறவுகளில் எமக்கு முக்கியமான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்படும்.

இது தொடர்பாக நாம் மாலைதீவுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கக்கூடிய சேவைகள் குறித்து தெரியப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சேவைகள் கட்டளைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அவசியம்.

அதற்கேற்ப, அரசியல் உருவாகும்போது, ஐ.நா. தூதுக்குழுக்களின் பணிகளின் தன்மையும் மாறுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply