• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யேர்மனியில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது!

உலகத் தமிழர்களே! 3 குறள்களை பரிந்துரையுங்கள்! யேர்மனியில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது!

சிலைக்கான மேடை அமைக்கும் பணி முடிந்து விட்டது. வண்ணம் பூசுவது, அழகுபடுத்துவது , திருவள்ளுவர் பற்றிய விபரங்கள் (தமிழ் - யேர்மன்) முன் பக்கத்திலும் மற்றைய மூன்று பக்கங்களில் மூன்று குறள்களும் பொறிப்பது போன்ற வேலைகள் இன்னமும் மிகுதியாக உள்ளன. மிகச் சிறந்தவை எனக் கருதுகின்ற குறள்களை நீங்கள் பரிந்துரையுங்கள். நாம் அவற்றில் 3 குறள்களை தெரிவு செய்கின்றோம்.

மேடை அமைப்பதற்கான செலவை Dortmund Innenstadt - West நகரசபை பொறுப்பெடுத்திருந்தது. சிலையும், அது சார்ந்த மற்ற வேலைகளுக்குமான செலவை நாம் பொறுப்பெடுத்திருக்கிறோம். சிலை அமைப்பது மற்றும் அது சார்ந்த வேலைகளுக்கு ஏறக்குறைய 20.000 யூரோக்கள் ஆகும் என்று கணக்கிட்டு, பங்களிப்பு செய்யும் படி கேட்டுக் கொண்டோம். பலர் இப் பெரும் பணியில் தம்மையும் இணைத்துக் கொண்டார்கள். 15.000 யூரோக்கள் இதுவரை சேர்ந்துள்ளன. 

இந்தத் தொகையை சேர்ப்பதற்கு நாம் அப்படி ஒன்றும் கஸ்ரப்படவில்லை என்பதை சொல்ல வேண்டும். சில முகநூல் பதிவுகள், சில காணொளிப் பதிவுகள், வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றங்களுடன்  இந்தத் தொகையை சேர்க்க முடிந்தது.

திருவள்ளுவர் மீதான பற்றுடன், இப்படி ஒரு சிலை அமைவதன் முக்கியத்தையும் உணர்ந்த பலர் செய்தியை அறிந்ததும் தாமாகவே முன்வந்து இப் பெரும் பணியில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அதனாலேயே இது சாத்தியமாகியது. மிகுதிப் பணத்தையும் வெகு விரைவில் சேர்த்து விட முடியும் என்கின்ற நம்பிக்கை பெரிய அளவில் இருக்கின்றது.

இப் பெரும் பணியில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்கின்ற உணர்வோடு வருபவர்களின் கரங்களை அன்போடு பற்றிக் கொள்கிறோம். முதலாவது கருத்தில் வங்கி இலக்கத்தை இணைத்திருக்கிறேன்.

எல்லோரும் இணைந்து திருவள்ளுவருக்கு ஒரு சிலை அமைப்போம்!

வி. சபேசன்

Leave a Reply