• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் 

சினிமா

கே.எஸ்.ரவிக்குமார் 1958ம் ஆண்டு மே 30ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள வெங்கனூரில் பிறந்தவர். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

பிரபல இயக்குனர் விக்கரமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது கே.எஸ்.ரவிக்குமார் 1990ல் ரகுமான் நடிப்பில் புரியாத புதிர் திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார். குறைந்த செலவில், குறுகிய காலத்துக்குள் எடுக்கப்பட்ட படம், நல்ல விமர்சனத்தைப்பெற்றது. தமிழ் சினிமாவில் தரமான த்ரில்லர் படங்களுள் முக்கியமான படமாக கருதப்படுகிறது.

அதன் பின்னர் சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, புருஷ லட்சணம், அவ்வை ஷண்முகி, நட்புக்காக, சுயம்வரம், படையப்பா, பாட்டாளி, பிஸ்தா, மின்சாரக்கண்ணா, சமுத்திரம், பஞ்சதந்திரம், தெனாலி, வில்லன், ஆதவன், தசாவதாரம், மன்மதன் அம்பு, லிங்கா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படடங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ளார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், வில்லன், காமெடியன், குணச்சித்திர வேடம், நடனம் என அனைத்து ஏரியாக்களிலும் கலக்குவார்.

சேரன் - பாண்டியன் வெற்றிக்குப்பிக் ரவிக்குமார் - சரத்குமார் கூட்டணி நல்ல குடும்ப படங்களை கொடுத்துள்ளனர். அதில் நன்றாக வெற்றி பெற்ற நாட்டாமை தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிகளிலும் எடுக்கப்பட்டது. இந்தக்கூட்டணியின் அடுத்தப்படம் நட்புக்காக மாபெரும் வெற்றி பெற்று இந்தியாவின் 18 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

2000மாவது ஆண்டில் வெளியான தெனாலி திரைப்படத்தை தயாரித்தார். 2014-ம் ஆண்டு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார்.

ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, விஜயகாந்த், கார்த்திக், அர்ஜீன், விஜய், அஜித், சூர்யா, மாதவன் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ரஜினியின் முத்து படம் கடல் கடந்த வெற்றியை பெற்றது. ஜப்பானியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. அடுத்து இந்த கூட்டணியில் வெளிவந்த படையப்பா படம் 275 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.

கமலின் 5 படங்களை இயக்கியுள்ளார். அவ்வை ஷண்முகி வித்யாசமான கதைக்களம், குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற படம். தசாவதாரம் இவர்கள் கூட்டணியின் அடுத்த வெற்றி படம்.

அஜித்துக்கு வில்லன், வரலாறு என நடிப்புத்திறனுக்கு தீனி போடும் படங்களை கொடுத்தவர். கமர்ஷியல் திரைப்படங்களுக்கான திரைக்கதை அமைப்பதில் கெட்டிக்காரர். தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவோ, நஷ்டமோ ஏற்படுத்தாத பட்ஜெட் ஃபிரென்ட்லி இயக்குனர்.

இவர் இயக்கிய நாட்டாமை, நட்புக்காக, படையப்பா, தசாவதாரம் முதலிய திரைப்படங்கள் இவருக்கு விருதுகளை பெற்று தந்துள்ளன.

சிறந்த இயக்குனராக தனது திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் வாழ்வில் எல்லா நலன்களும், வளமும் பெற்று வாழ ஹெச்.டி தமிழ் அவரை வாழ்த்துகிறது.

Sridhar Padmanaban

Leave a Reply