• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரோயல் கல்லூரி மாணவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு

இலங்கை

கொழும்பு ரோயல் கல்லூரியின் அரசியல் விஞ்ஞான சங்கம் மற்றும் மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட கொழும்பை அண்மித்து காணப்படும் கல்விசார் பெறுமதிமிக்க இடங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரியின் அரசியல் விஞ்ஞான சங்கத்தின் மாணவர்கள் மற்றும் மாணவர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 107 பேர் ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி செயலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்திருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சுமுகமான சந்திப்பிலும் ஈடுபட்டனர்.

இதன்போது ஜனாதிபதி, நாட்டின் அரசியல் வரலாறு மற்றும் ரோயல் கல்லூரியில் உருவாகிய சிரேஷ்ட அரசியல் தலைமைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

கொல்வின் ஆர்.டி.சில்வா மற்றும் ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோர் ரோயல் கல்லூரியின் சகபாடிகளாக இருந்து இந்நாட்டின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் தெரிவாகியிருந்தமை சிறப்பம்சமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பதையும் நினைவுகூர்ந்தார்.

நாட்டின் எதிர்கால அரசியல் தலைமைத்துவம் மாணவர்கள் ஆவர் என்ற வகையில், கல்விச் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால கல்வி செயற்பாடுகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் ஆசிரியர்கள், இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர, பாதுகாப்பு உதவிச் செயலாளர் மேஜர்.டீ.ஜே.என்.பீ.தங்கொள்ள உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply