• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குடிசை

சினிமா

'குடிசை!'-1979-ஆம் ஆண்டு ரிலீஸான மாற்று சினிமாவிற்கான திரைப்படம்!
படத்தின் இயக்குநர்:ஜெயபாரதி
ஒளிப்பதிவு இயக்குநர்கள்:ராபர்ட்-ராஜசேகரன்
டைட்டில் கார்டில் ராஜசேகர்-ராபர்ட் என்றே இடம் பெறுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராபர்ட் திரைப்படக்கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர்.
இசை:G.காமேஷ்.இவர்தான் கமலா காமேஷின் கணவர்.
டெல்லி கணேஷ்-கமலா காமேஷ் ஆகிய இருவருமே இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆகியுள்ளார்கள்.
கதையின் நாயகனாக நடித்த தண்டாயுதபாணி எனும் நடிகர் நாடகங்களில் நடித்தவர்.இவருக்கும் இதுதான் முதல் திரைப்படம்.அற்புதமான நடிகர்.'காதலிக்க நேரமில்லை'படத்தில் சச்சுவின் தந்தையாக இவர்தான் நடித்ததாக சொல்லப்படுகிறது.நன்றாக நடித்திருப்பார்.திறமையிருந்தும் பல பேருக்கு வாய்ப்பேயில்லாமல் போய்விடுகிறது.
நாயகனுக்கு கொழுந்தியாளாக நடித்த ராஜீ எனும் நடிகையையும் வேறு எந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை.அழகான முக கவர்ச்சி அமைந்த சிறந்த நடிகையாக உள்ளார்.
முதன் முதலில் Crowd funding மூலமாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம்.
'குடிசை,' எனும் நாவலைத் தழுவியே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.நாவலை எழுதியவர் து.ராமமூர்த்தி ஆவார்.இயக்குனர் ஜெயபாரதியின் தந்தைதான் இவர்.படத்திற்கான வசனத்தையும் து.ராமமூர்த்திதான் எழுதியுள்ளார்.
இயக்குநர் ஜெயபாரதி அவர்கள் எவரிடமும் உதவிஇயக்குனராக பணியாற்றியது இல்லையாம்.படப்பிடிப்பிற்கு சென்ற முதல் நாளில்தான் கேமராவையே பார்த்ததாக சொல்கிறார்.
ஜெயபாரதி அவர்கள் ஆரம்பத்தில் தினமணி நாளிதழில் திரைப்பட விமர்சனம்தான் எழுதியிருக்கிறார்.அன்றைக்கு இவருடைய விமர்சனம் மிகப்பிரபலம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்..எதையும் பூசிப் மெழுகாமல் அப்படியே போட்டு உடைப்பதால் பல பேரின் கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.
இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்களும் இவருடைய விமர்சனத்தைப் படித்து கோபப்பட்டு காரை அனுப்பி நேரில் வரவழைத்து பேசியிருக்கிறார்.அப்பொழுதும் தான் எழுதியதிலிருந்து கருத்து எதையும் மாற்றிக்கொள்ளாமலே பேசியிருக்கிறார்.'படம் எடுத்துப் பார் ,அப்போ தெரியும் அதன் கஷ்டம்',என்றும் சொல்லியிருக்கிறார்.

அந்த சந்திப்புக்குப் பிறகு,ஜெயபாரதி அவர்களை முன்று முடிச்சு திரைப்படத்தில் ரஜினிகாந்த் செய்த கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைக்கவே ஆசைப்பட்டிருக்கிறார்.ஏனோ,இவருக்கு நடிக்க விருப்பம் இல்லாமல் படம் இயக்குவதற்கான முயற்சியில் இறங்கி குடிசை படத்தை முடித்து, அன்றைக்கு விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுகளை பெற்ற திரைப்படமாகத்தான் அமைந்தது.பல திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளது.
தமிழில் வெளியான கடைசி Black and white திரைப்படம் இதுதான்.'குடிசை',திரைப்படத்தின் மூலமாக, 'ஜீவாலா',எனும் சொந்த திரைப்படக் கம்பெனியையும் உருவாக்கியுள்ளார்.
'ஜுவாலா',எனும் பெயரை பரிந்துரைத்தவர் எழுத்தாளர் வண்ணநிலவன் ஆவார்.
அன்றைக்கு 1,000 அடி பிலிம் ரோல் 500 ரூபாய்.
முதலில்,10 நண்பர்களிடமிருந்து தலா 500 ரூபாயாக சேகரித்துதான் படத்தை ஆரம்பித்திருக்கிறார்.அந்த நண்பர்களில் எழுத்தாளர் இந்துமதியும் ஒருவர்.
Out door unit செலவை ஒளிப்பதிவாளர் ராபர்ட் ஏற்றுக்கொண்டுள்ளார்.
படப்பிடிப்பு நடந்த இடம் சென்னையை தாண்டி பாடிக்குப்பம் எனும் இடம்.சாப்பாட்டு செலவை அந்த ஊரில் உள்ள செல்வந்தரை நண்பர் ஒருவர் முலமாக ஏற்க வைத்திருக்கிறார்கள்.
இவர் இயக்கிய, 'நண்பா நண்பா',எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசியவிருதும் கிடைத்தது.
'புத்திரன்',எனும் திரைப்படமும் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.Y.G.மகேந்திரனும்-சங்கீதாவும் நடித்துள்ளனர்.12 நாட்களில் இத்திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
குடிசை படத்தின் தயாரிப்பு செலவிற்காக கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளை எல்லாம் நடத்தி பண வசூல் செய்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.அந்த நேரத்தில் பணம் வாங்காமல் நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்திருக்கிறார் சிலோன் மனோகர் அவர்கள்.இச் செய்திகள் எல்லாம் இலங்கை பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.
குடிசை படத்தின் Post Production-க்கா இவருடைய தந்தை வீட்டுப் பத்திரத்தையே அடமானமாக வைத்துக்கொள்ள தந்துள்ளார்.மேலும் பணம் தேவைப்பட்டிருக்கிறது.அவ்வேளையில் இவர் பெரிதும் மதிக்கும் வங்காள பட இயக்குநர் சென்னை பாம்குரோவ் ஓட்டலில் தங்கியிருப்பதை அறிந்து தன்னுடைய படத்தை எடுக்கும் விவரங்களை எல்லாம் கூறி பணப் பிரச்னையால் படம் நிற்பதாக சொன்னவுடன்,
மிருணாள்சென்னா வைத்து தமிழில் படம் தயாரிக்க வந்திருந்த கேரள தயாரிப்பாளரிடம் 25,000 ரூபாய் வாங்கி இவரிடம் பேருதவி செய்திருக்கிறார்.
ஜெயபாரதி அவர்கள் படத்தை இயக்குவதற்கு முன்பு சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரில் வங்காளப்படங்களை எல்லாம் சிறப்பு காட்சிகளாக சினிமா ஆர்வலர்களுக்கெல்லாம் திரையிட்டு காட்டியிருக்கிறார்.குறிப்பா சத்யஜித்ரே,மிருணாள்சென் படங்கள்.அந்த வகையில் கூட இயக்குனர் மிருணாள்சென் கூட இவருக்கு தொடர்பு இருந்திருக்கலாம்.அதனால்,அவர் உதவி செய்திருக்கலாம்.இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில்  25,000 ரூபாய் என்பது பெரும் தொகைதான்.அதைக் கொடுப்பதற்கு பெரும் மனம்தான் வேண்டும்.
இயக்குனர் மனோபாலா இவரிடம்தான் முதலில் இணைஇயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.Post production விஷயமாக படம் காலதாமதம் ஆனதால் மனோபாலா கமல் சார் மூலமாக பாரதிராஜா அவர்களிடம் சேர்ந்திருக்கிறார்.பாரதிராஜா அவர்களிடம் அவர் பணிபுரிந்த முதல் திரைப்படம் 'புதிய வார்ப்புகள்'.பாரதிராஜாவிடமிருந்து கோபித்துக் கொண்டு சென்ற பாக்யராஜை மீண்டும் பாரதிராஜாவிடமே கொண்டு சேர்த்திருக்கிறார்.எதற்காக இந்த முயற்சிகளை எல்லாம் அவர் செய்தார் என்பதை 'நினைவோ ஒரு பறவை',எனும் அவருடைய நூலில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.
மாற்று சினிமா கலைப் படங்களை திரையிடுவதற்கு என்றே கொல்கத்தாவில் அரசு சார்பில், 'ரவீந்தர சதன்',எனும் மினி திரையரங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.அதைப் போல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும் என ஆசைப்படுகிறார்.நியாயமான ஆசைதான் அரசுக்கு மனம் வேண்டுமே.
இவர் இயக்கிய மற்ற திரைப்படங்கள்,ஊமை ஜனங்கள்,ரெண்டும் ரெண்டும் அஞ்சு,உச்சிவெயில்,நண்பா நண்பா,குருஷேத்ரம்,புத்திரன்.
''குடிசை",திரைப்படத்தைப் பாருங்கள்.புதியதோர் திரையனுபவம் கிடைக்கும்.
டெல்லி கணேஷீம்,கமலா காமேஷீம் முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
படத்திற்கான விமர்சனத்தை பிறகொரு பதிவில் முயற்சிக்கிறேன்.
மேலே சொன்ன தகவல்கள் எல்லாம் இயக்குனர் ஜெயபாரதி அவர்கள் இந்து தமிழ்திசை நாளிதழில் 2017-ஆம் ஆண்டு கொடுத்த பேட்டியிலிருந்து திரட்டப்பட்டதாகும்.
'குடிசை',படத்தின் பிரிண்டை  அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருவது படத்திற்கான கௌரவம்தான்.
'குடிசை',படத்தைப் பார்க்க பரிந்துரைத்த நண்பர் பிரகாஷ் அர்ஜுனுக்கு மிக்க நன்றி.
Thanks to:Golden cinema you tube channel.,ஆனந்த விகடன்.
சே மணிசேகரன்

Leave a Reply