• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நானும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் என்றார் கலைஞர்! - இயக்குநர் கே. பாக்யராஜ்

சினிமா

நான் திரைத்துறைக்கு வந்து அடையாளம் தெரியத் தொடங்கியபோது, எம்.ஜி.ஆர் அவர்களுடன் நெருக்கம் காட்டினாலும், கலைஞருடனும் தொடர்பில் இருந்தேன். எனது படங்களில் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆர் பாட்டு அல்லது ஏதாவது ஒரு சீன் வைத்து விடுவேன்.
இப்படி எம்.ஜி.ஆர் ரசிகராகக் காட்டிக் கொண்டிருந்த நாட்களில், 'குங்குமம்' இதழில் எம்.ஜி.ஆர் அவர்களின் சினிமா வாழ்க்கை குறித்து தொடர் எழுதும்படி அழைப்பு வந்தது.
எனது எழுத்துக்களைத் தொடர்ச்சியாக வாசித்து வந்ததுடன், எழுத்தாளனாக என்னை ரசித்து, எழுத அழைத்தது எனக்குப் பெருமையாக இருந்தது.
அந்தத் தொடர் குறித்து கலைஞர் அவர்களிடம் பேசுகையில், 'எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையை எழுதப்போவதில்லை, அவரது ரசிகனாக அவரது சினிமா வாழ்க்கையை மட்டுமே எழுதப்போகிறேன்' என்றேன்.

அதற்கு அவர், 'எம்.ஜி.ஆருக்கு நானும் ரசிகன்தான்' என்றதுடன், எழுதும்படி உற்சாகமூட்டினார். அதை எழுதுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆரும் அந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து உற்சாகம் கொடுத்தார்.
நானும் அந்தத் தொடரில் சொல்ல நினைத்ததையெல்லாம் தெரிவித்தேன்.
எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் அப்படியான சுதந்திரம் அளித்த பத்திரிகையாளராக கலைஞர் இருந்தார்.
எம்.ஜி.ஆர் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது, நான் அவர் மீது கொண்டிருந்த பற்று காரணமாக நேரடி அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன்.
அ.தி.மு.க பிரச்சார மேடைகளில் பேசுகையில், கலைஞரை விமர்சிக்க வேண்டிய நிலை இருந்தது.
அப்படியான கூட்டங்களில் கலைஞர் பெயரைச் சொல்ல வேண்டும், கலைஞர் என சொல்லக்கூடாது என தொண்டர்கள் கூச்சலிடுவார்கள். ஆனால், நான் அதைச் செய்யவில்லை.
என் வயதுக்கும் அறிவுக்கும் அனுபவத்துக்கும் அவரை பெயர் சொல்லி அழைக்க முடியாது, எனக்கு அதில் உடன்பாடு இல்லை என மறுத்துவிடுவேன்.
இந்த நிகழ்வுகளைப் பின்னர் அறிந்துக்கொண்டு எம்.ஜி.ஆர். என்னைப் பாராட்டினார். 'எனக்கும் அவருக்கும் அரசியல் முரண்பாடுகள் இருக்கும். ஆனால், மரியாதையுடன் நடந்துக் கொண்டதுதான் சரி, எனப் பாராட்டினார். 'அதுதான் நம் பண்பாடு' என விளக்கினார் எம்.ஜி.ஆர்.
https://cinirocket.com/article-about-makkal-thilagam-mgr/
- நன்றி: முரசொலி 26.11.2023

Leave a Reply