• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அப்போதெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்கூல் பையிலேயே ஒரு சிறிய, குழந்தைகளுக்கான கீபோர்ட் இருக்கும். 

சினிமா

ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரஹ்மான் 25 வயதில் தனது முதல் படமான ரோஜா’ படத்திற்கு இசையமைத்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தனது ஒன்பதாவது வயதிலேயே டியூன் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸிங் செய்ததும் அது பாடலாக உருமாற்றம் பெற்றதும் தெரியுமா.. 

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை கே.சேகர் ஒரு இசையமைப்பாளர். பெரிய அளவில் வெளிச்சம் பெற்றிடாத அவருக்கு தமிழைவிட மலையாளத்தில் அப்போது அவருக்கு ஓரளவு வாய்ப்புகள் வந்துக்கொண்டிருந்தது.  அவ்வாறு வந்த ஒரு மலையாளப் படத்தின் கம்போஸிங் ஒன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவில் நடந்துவந்திருக்கிறது. அப்போது ஒன்பது வயதான ஏ.ஆர்.ரஹ்மான் பள்ளி சென்றுவிட்டு மாலையில் தன் தந்தை பணியாற்றும் ஸ்டூடியோவுக்கு வந்து வெளியில் காத்துக்கொண்டிருந்திருக்கிறார். உள்ளே ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை போட்ட எந்த டியூனுமே சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு பிடிக்காமல்போக, கம்போஸிங் நேரம் நீண்டுக்கொண்டே இருந்திருக்கிறது.

அப்போதெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்கூல் பையிலேயே ஒரு சிறிய, குழந்தைகளுக்கான கீபோர்ட் இருக்கும். நேரம் நிறைய ஆகவே ரஹ்மான் அந்த கீ-போர்டை எடுத்து தன் மனம் போன போக்கில் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார். சுற்றிலும் யாருமில்லை என நினைத்து ரஹ்மான் தன்னை மறந்து வாசித்துக்கொண்டிருக்க, அப்போது சிகரெட் பிடிப்பதற்காக வெளியில் வந்த அந்த மலையாளப் பட இயக்குநர் இதைக் கவனித்திருக்கிறார். ரஹ்மான் வாசிப்பதில் ஒரு ஃபீல் இருப்பதையும் உணர்கிறார் அந்த இயக்குநர். சிறுவன் ஏதோ கைக்கு வந்ததை வாசிக்கிறானோ என்னவோ எனத் தொடர்ந்து கவனிக்க, ரஹ்மான் தான் வாசித்ததை திரும்பத் திரும்ப அச்சு பிசகாமல் அப்படியே வாசித்திருக்கிறார். அதைக் கேட்டு மனம் லயித்த அந்த இயக்குநர் சிகரெட்டை வீசிவிட்டு உடனே உள்ளே சென்று ரஹ்மானின் தந்தையிடம் சென்று ‘எனக்கு அந்த பையன் போட்ட டியூன் வேணும்’ என்றிருக்கிறார். அவரோ வெளியில் வந்து பார்க்க அது தன்னுடைய மகன் ரஹ்மான்தான் என்பதைக் கண்டு மகிழ்ந்துபோயிருக்கிறார்.

உடனே மீண்டும் ரஹ்மானை அந்த டியூனை வாசிக்கவைத்து அதைக் கவனித்துக்கொண்ட கே.சேகர் அதையே பின் பாடலாக்கி அந்த மலையாளப் படத்தில் பாடலாக இடம்பெறச் செய்திருக்கிறார். 

அந்தப் பாடல் அப்போது மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது என்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா..

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்

Leave a Reply