• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசியலும் சினிமாவும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாம தனித்தனியா இருந்துச்சு

சினிமா

எம்.கே.தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும் சினிமாவுல ஓகோன்னு இருந்த அந்தக் காலத்துல அரசியலும் சினிமாவும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாம தனித்தனியா இருந்துச்சு. அவுங்கவுங்க அவுங்கவுங்க வேலையை பாத்தாங்க.

நாட்டை அரசியல்வாதிங்க கவனிச்சிட்டாங்க. கலையை நடிகருங்க, மத்தக் கலைஞருங்க பார்த்துக்கிட்டாங்க. அதனால்தான் அப்போ எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. எல்லாரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருந்தோம்.

அந்த நிலைமை அடியோடு மாறி, இப்போ சினிமாவுக்குள்ளே அரசியலும், அரசியலுக்குள்ளே சினிமாவும் பூந்து ஒண்ணோட ஒண்ணா கலந்திடுச்சி. அதுல பழைய அண்ணன் தம்பிங்க உறவு, பந்த பாசமெல்லாம் அநியாயத்துக்குப் பாழாப் போயிடுச்சி.

இவன் இந்தக் கட்சியில் இருக்கிறான். அவன் அந்தக் கட்சியில் இருக்கிறான். இவனை அவனுக்கு ஆகாது. அவனை இவனுக்குப் பிடிக்காது. இப்படி சினிமாவை வச்சித்தான் நம்ம நாட்டு அரசியல்னு ஆயிடுச்சி.

ஆளுக்கொரு பக்கமாக சினிமாவுல பூந்து, அதை இதை எழுதி, மக்களை மயக்கி கட்சியை வளத்திட்டாங்க. இதுக்கு இடையில் பெரியாரோட திராவிடக் கழகத்துக்குன்னு இருக்கிற ஒரே நடிகர் நான் மட்டும்தான். மத்த எழுத்தாளனுங்க, பேச்சாளனுங்க ஒட்டுமொத்தமா எல்லாரும் புதுக்கட்சிக்குப் போயிட்டானுங்க.

கணேசன் மட்டும் (சிவாஜி) காமராஜரோடு சேர்ந்திட்டான். சொல்லிக்கிறாப்போல கலைஞர்ங்க யாருமே இல்லாம இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் காமராஜரும் இதான் சரியான சமயம் என்று கணேசனை சேர்த்துக்கிட்டாரு. உடனே கணேசன் கதர் வேட்டி கட்டி கதர் சட்டை, கதர் துண்டு போட்டுக்கிட்டான். என்ன பிரயோஜனம்?

பெரியார் சும்மாவா சொன்னாரு? ‘தமிழனுக்கு எதிரி தமிழன்தான்!’ திராவிடக்கட்சி தோத்துப்போயிடுச்சின்னா, அதுக்கு தமிழனுங்கதான் காரணமாக இருப்பான்னு. இப்போ அரசியல்லே பூந்து பட்டம் பதவிமேல ஆசைப்பட்டு பல திராவிடனுங்க பெரியார் கொள்கைக்கு விரோதமாக கோவிலுக்குப்போயி சாமி கும்பிட ஆரம்பிச்சி, நெத்தியில் விபூதி, குங்கும ‘மார்க்’ போட்டுக்கிறானுங்க.

பெரியார் பேசுன பேச்சு, இந்தத் தள்ளாத வயசுலேயும், ஊர் ஊரா சுத்தி மீட்டிங் போட்டு சொல்லிச்சொல்லி அவர் பட்ட பாடெல்லாம் வீணாப்போயிடுச்சி. பட்டம், பதவி, பணம்னு அரசியல்வாதிங்க அலைய ஆரம்பிச்சிட்டானுங்க. இது எதுல போயி முடியும்னு தெரியலே!

என்னைப் பொறுத்தவரைக்கும் ஒண்ணு மட்டும் உறுதி. என் உயிரையே விட்டாலும் விடுவேனே தவிர, பெரியாரை மட்டும் விடவே மாட்டேன். என் அறிவுக் கண்ணைத் திறந்துவச்சு, என்னை ஒரு மனுஷனாக்குனதே அவர்தான். அவர் மட்டும் இல்லேன்னா, படிப்பறிவே இல்லாத வெறும் நாடக நடிகனான இந்த ராதா, பக்கா ரவுடி ஆயிருப்பேன்.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் கருத்துக்கள் , ஆரூர்தாஸ் அவர்களின் பதிவு , தினத்தந்தியில் .

Leave a Reply