• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சார்லி சாப்ளின் தொடங்கி சந்திரபாபுவரை அதற்கு விதிவிலக்‍கல்ல.

சினிமா

நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்‍கையில் படிந்திருக்‍கும் சோகம் ஆழமானது.கொஞ்சம் நீளமானது... சார்லி சாப்ளின் தொடங்கி சந்திரபாபுவரை அதற்கு விதிவிலக்‍கல்ல.
சந்திரபாவுக்‍கு சோகம்தான் சொந்தக்‍காரர்... 
விரக்‍தி, இவரது விருந்தாளி..
கண்ணீர் இவரது காதலி... 
மொத்தத்தில் திரையில் சிரிக்‍கவைத்த சந்திரபாபுவின் திரைமறைவு வாழ்க்‍கையில்தான் எத்தனை சோகம்...?
1950-களில் வெற்றிப் படிக்‍கட்டுகளில் ஏறிக்‍ கொண்டிருந்த மக்‍கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகியோரோடு சந்திரபாபுவும் சமமாக ஏறிக்‍கொண்டிருந்தார்... வேகமான வளர்ச்சி, வேகத்தடையில்லாத வளர்ச்சி... நடிப்புத் திறமையும், நடனத் திறமையும், சந்திரபாபுவின் கலை உள்ளத்துக்‍குள் ஒரு புதையலாகவே இருந்தது... அதைத் தன் ரசிகர்களுக்‍கு வாரி வழங்கினார்.
அபாரமாகப் பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, நடனமாடுவதிலும் கில்லாடி... மேற்கத்திய நடனம்... டப்பாங்குத்து... என எல்லாவற்றிலும் கைதேர்ந்தவர்... இல்லை... நடனம் என்பதால் கால் தேர்ந்தவர்... எல்லாவகை நடனங்களும் அவருக்‍கு அத்துப்படி... பிரியாணி சாப்பிடுபவன், பழைய கஞ்சியையும் ஒரு கைபார்ப்பதுபோல...
கதாநாயகர்களுக்‍கு வரும் ரசிகர் கூட்டம்போல சந்திரபாபுவுக்‍கும் ரசிகர் கூட்டம் இருந்தது... இருக்‍கிறது... நடனம், நகைச்சுவை, குணச்சித்திரம், எல்லாவற்றிலும் கைதேர்ந்த சந்திரபாபுவுக்‍கு... வாழ்க்‍கை பாதை மட்டும் வசப்படவில்லை... வளரும் நாடுகளை வளைக்‍கும் வல்லரசுகளைப் போல, வாழ்க்‍கையும் சந்திரபாபுவைத் தன் போக்‍குக்‍கு வளைத்துக்‍ கொண்டு எங்கெங்கோ கொண்டு சென்றது...
நகைச்சுவை நடிகர்கள் பலர், தமிழ்த் திரையுலகைக் கோலோச்சியிருக்‍கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்... ஒப்பற்ற தரம்... சிரிக்‍கவும் வைத்து, சிந்திக்‍கவும் வைத்தார் கலைவாணர்... துரைராஜ், காளி. என். ரத்தினம், டணால் தங்கவேல்... பின்னாளில் நாகேஷ், சோ எனப் பட்டியல் நீளும்... ஒவ்வொருவருக்‍கும் ஒவ்வொரு பாணி... நடன அசைவுகளை நளினமாகக்‍ காட்டும் சந்திரபாபுவோ நகைச்சுவை ஞானி...
நடிகராக, பாடகராக, தனக்‍கான பாடல்களைத் தானே பாடிவந்த சந்திரபாபு... 'பெண்' படத்தில் வீணை பாலச்சந்தருக்‍காக பாடிய 'உல்லாசமாகவே உலகத்தில் வாழவே' என்ற உல்லாசப் பாடல்... திரையுலகம் உள்ளவரை வாழும்...
'தட்டுங்கள் திறக்‍கப்படும்' என்ற திரைப்படத்தை சொந்தமாகத் தயாரித்து நஷ்டத்தில் மூழ்கினார் சந்திரபாபு. பிறகு சந்திரபாபுவின் திரையுலக கதவுகள் மூடிக்‍கொண்டன. நடிப்பிற்காக பல முகங்களைக் காண்பித்த சந்திரபாவுக்‍கு, 'தட்டுங்கள் திறக்‍கப்படும்' திரைப்படம் இறங்கு முகத்தை மட்டுமே காட்டியது
திருமணங்கள் சொர்க்‍கத்தில் நிச்சயிக்‍கப்படுகின்றன. மிகச் சரி... ஆனால் சொர்க்‍கத்தில் நிச்சயிக்‍கப்படும் திருமணங்கள் சொர்க்‍கமா? நரகமா? என்பது வாழ்ந்து பார்க்‍கும்போதுதான் தெரிகிறது. சந்திரபாபுவின் திருமண வாழ்க்‍கை தோல்வியில் முடிந்தது. முதலிரவில் அவரது மனைவி வேறு ஒருவரைக் காதலித்ததாகச் சொல்ல, அந்தப் பெண்ணின் காதலனையே நேரில் அழைத்து அவரோடு சேர்த்து வைத்தவர் சந்திரபாபு. சந்திரபாபுவின் உண்மைக் கதைதான் பின்னாளில் ஒரு திரைப்படமாகவும் வெளிவந்தது. ஒரு சிலரது வாழ்க்‍கை பலருக்‍குப் பாடமாகிறது. ஆனால் சந்திரபாபுவின் வாழ்க்‍கை படமுமானது - பலருக்‍குப் பாடமுமானது.

''மறப்பினும் ஒத்துக்‍ கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்‍கங் குன்றக்‍ கெடும்''
- என்கிறது குறள்.
மறை நூல்களை கற்பவன், தான் கற்றதை மறந்தாலும் மீண்டும் கற்றுக்‍கொள்ளலாம். ஆனால், ஒழுக்‍கம் குறைதலால், அவன் குடிப்பெருமை கெட அவனும் அழிவான் என்பதே இதன் பொருள்.
சந்திரபாபு நன்கு கற்றுத்தேர்ந்த கல்வியாளர்தான்... ஆனாலும், குறளின் பொருள் அறியாததாலோ என்னவோ வாழ்க்‍கை அவருக்‍கு வசப்படவில்லை. சந்திரபாபுவின் ஒப்பனை வாழ்க்‍கை அழகாக இருந்தது. ஒப்பனை கலைந்த நிஜ வாழ்க்‍கையோ, அலங்கோலமாய் அமைந்ததது. 50 வயதைக்‍கூட எட்டாமல் அவருக்‍கு நேர்ந்த மரணம் அனைவரையும் அழவைத்தது.
என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே, பலருக்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது. 'ஒண்ணுமே புரியல உலகத்திலே' என்று அவரே பாடிய பாடலைப் போல...

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்
 

Leave a Reply