• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐரோப்பாவில் ஒரே ஆண்டில் மரணமடைந்த 400,000 மக்கள்

மூன்று முக்கிய காற்று மாசுபாடு காரணமாக ஐரோப்பாவில் 2021ல் மட்டும் 400,000 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவிற்கு மாசுபாடுகளை குறைத்திருந்தால் இறப்பு எண்ணிக்கையை குறைத்திருக்கலாம் என ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை தெரிவித்துள்ளது.
  
ஐரோப்பிய சுற்றுச்சூழல் முகமை தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் PM2.5 காரணமாக மாசு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறிப்பாக இருதய நோய்களுக்கு அடிப்படை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனால் 2021ல் 253,000 இறப்புகள் பதிவானதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். நைட்ரஜன் டை ஆக்சைடு மாசுபாடு காரணமாக 52,000 பேர்கள் இறந்துள்ளதாகவும் குறுகிய கால ஓசோன் தாக்கம் காரணமாக 22,000 இறப்புகளும் பதிவாகியுள்ளது.

பட்டியலிடப்பட்டுள்ள மூன்று காற்று மாசுபாடுகளும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவிற்கு அதிகமாகவே பதிவாகியுள்ளது. இந்த வழிகாட்டுதல் அளவுகளுக்கு காற்று மாசுபாட்டைக் குறைப்பது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இறப்புகளைத் தடுக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PM2.5 காரணமாக அதிக இறப்பு எண்ணிக்கை போலந்து, இத்தாலி மற்றும் ஜேர்மனியில் பதிவாகியுள்ளது. ஆனால் வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து, ஸ்காண்டிநேவியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளில் மிகக் குறைந்த தாக்கம் காணப்பட்டது.

அதேவேளை நைட்ரஜன் டை ஆக்சைடு மாசுபாடு மற்றும் குறுகிய கால ஓசோன் பாதிப்பு காரணமாக துருக்கி, இத்தாலி மற்றும் ஜேர்மனியில் இறப்பு எண்ணிக்கைகளில் மிகப்பெரிய தாக்கம் பதிவாகியுள்ளது. 
 

Leave a Reply