• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டைரக்டர் என்ன சொன்னார்? - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்

சினிமா

எம்.ஜி.ஆர். கத்தி சண்டைக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவரை ‘அட்டை கத்தி வீரர்’ என்றெல்லாம் அக்காலத்தில் விமர் சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், உண்மை யான கத்தியைக் கொண்டே எம்.ஜி.ஆர். படங்களில் சண்டை போட்டிருக்கிறார். அவர் பயன்படுத்திய கத்திகள் சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘சர்வாதிகாரி’ படத்தில் நம்பியாருடனான வாள் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை ஊடுருவிவிட்டது. அதே போல, ‘அரசிளங்குமரி’ படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காகவே புகழ் பெற்றது.
அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் ஆக்ரோஷமான சண்டை. ஒரு நாள் படப்பிடிப்பில் நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணுக்கு மேலே புருவத்தில் பட்டு கிழித்து விட்டது. படத்துக்கான மேக் அப் இல்லாமல் எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தோற்றத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடது புருவத்தில் அந்தத் தழும்பு தெரியும்.

படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் புருவத் தில் நம்பியாரின் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது. இன்னும் இரண்டு அங்குலங்கள் கீழே பட்டிருந் தால் எம்.ஜி.ஆரின் கண் பார்வை பறிபோயிருக் கும். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஓடி வந்த உதவியாளர் ஒருவர், எம்.ஜி.ஆரின் புருவத்தில் ரத்தம் கொட்டிய இடத்தில் துணியை அமுக்கிப் பிடித்தபடி, நம்பியாரைப் பார்த்து, ‘‘என்னண்ணே, பார்த்து செய்யக் கூடாதா? நீங்க கூடவா இப்படி?’’ என்று இரைந்தார். நம்பியாருக்கும் வருத்தம்.
எம்.ஜி.ஆர். உடனே, ‘‘அவருக்கு என் மீது கோபம் இல்ல; அந்தக் கத்திக்குத்தான் என் மீது கோபம்’’ என்று சொல்லி அந்த இடத்தில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.
பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன்யா இப்படி செஞ்சீரு?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
‘‘நியாயமாக பார்த்தால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லணும்’’ - நம்பியார் பதில்.
தெரியாமல்தான் என்றாலும் கத்தியாலும் குத்தி விட்டு, அதற்கு நன்றி வேறா? என்று நினைத்த படி ‘‘ஏன்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு, ‘‘டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தாமல் இருந்ததற்காக’’ என்று மேலும் புதிர் போட்டார் நம்பியார்.
‘‘டைரக்டர் என்ன சொன்னார்?’’ - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.
‘‘நெஞ்சில் குத்தச் சொன்னார்’’ என்ற நம்பியாரின் பதிலைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்த சிரிப்பால் படப்பிடிப்பு அரங்கமே அதிர்ந்தது.

Annadurai Duraisamy
 

Leave a Reply