• Welcome to TamilsGuide
செய்திகள் 1

T.S. யோசுவாவின் புதிய நாவல் பூச்சாண்டி

சினிமா

T.S. யோசுவாவின் புதிய நாவல் “பூச்சாண்டி” 18 - 11 - 2023 கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன் அறிமுக உரையாற்றினார். மலையக மக்களின் வரலாற்றை புதிய நோக்கு நிலையில் யோசுவா பார்க்கிறார். அவர் எப்போதும் வழமைகளிலிருந்து விலகும் மாற்றுப் பார்வையைக் கொண்டவர். அது இந்த நாவலிலும் தெரிகிறது என்றார். 

எழுத்தாளரும் மதபோதகருமான பெனி நிகழ்வுக்குத் தலைமையேற்றிருந்தார்.

நாவலைப்பற்றிய விமர்சனவுரையாற்றிய அமரசிங்கம் கேதீஸ்வரன், மிகச் சிறப்பான முறையில் தன்னுடைய பார்வையை முன்வைத்தார். வன்னியில் - குறிப்பாக கிளிநொச்சியில் தள்ளுவிசையினால் மக்கள் குடியேறிய விதத்தைப்பற்றியும் அப்படிக் குடியேறியோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவோர் நிலைப்பாட்டின் அடிப்படையில் கம்பீரமான வாழ்க்கைக்கான முடிவுகளை எடுத்தவர்களே என்றார். 

யாழ்ப்பாண ராஜ்ஜிய காலத்தில் அந்நியருக்குத் திறை செலுத்த விரும்பாதவர்களே அங்கிருந்து வெளியேறி வன்னியில் குடியேறியவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்தவே பூநகரி, இயக்கச்சி, ஆனையிறவு, வெற்றிலைக்கேணி போன்ற இடங்களில் காவற்கோட்டைகளை ஒல்லாந்தர் கட்டினார் என்றும் அவர் சொன்னார். 

விவாதத்துக்குரிய கருத்துகள் இவை. ஆனாலும் தன்னுடைய பார்வையை தருக்கபூர்வமாக கேதீஸ்வரன் முன்னிறுத்தினார்.

கருத்துரையின்போது யோசுவா ஒரு நடைமுறைவாதி. யதார்த்தவாதி. புதியன சிந்திப்போன் என்ற அடிப்படையில் இந்த நாவலையும் எழுதியுள்ளார். இது நிச்சயமாக விவாதப்பொருளாகும் என்றேன். 

இன்னொரு நண்பரான கண்ணன் (கஜேந்திரகுமார்) பேசும்போது, பார்வைகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால்  வரலாற்றை எழுதும்போது அதற்குரிய அடிப்படைகள் பேணப்படுவது அவசியம். 1980 களில் ஒரு இயக்கத்தினால் இன்னொரு இயக்கம் தடைசெய்யப்படும்போது நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை யார் எழுதுவது? என்று கேட்டார்.  அவர் மேலும் ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தார். மட்டக்களப்பு முக்குவச் சட்டம், யாழ்ப்பாணத் தேசவழமைச் சட்டம், கண்டிச் சட்டம் என்றுள்ள சட்டத்தைப்போல கனடாவிலும் தேசவழமைச்சட்டம் இருந்தால் எப்படியிருக்கும்? என்று கேட்டார்.

இந்த மாதிரிப் பல கேள்விகளை எழுப்பும் யோசுவாவின் நாவல்  நிச்சயமாக புதியதொரு கோணத்தில் தெரியும் காட்டியே!

Karunakaran Sivarasa

Leave a Reply