• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈழத் தமிழர்களுக்கான சினிமா

சினிமா

நவம்பர் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை, நேற்று. ஸ்காபரோ வூட்சைட் சினிமாவில் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் படைப்பான ‘யாதும் யாவரும்’ என்ற திரைப்படத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
எனது ஊடகக் காலத்தில் ஈழத் தமிழர்கள் தமக்கெனத் தனித்துவமான திரைப்படங்களைத் தயாரித்து, உலகளவில் சினிமாத் துறையில் ஒரு கௌரவமான அடையாளத்தைப் பெறவேண்டும், அதற்காக மக்களின் இரசனையை வளர்க்கக்கூடிய வகையில் வானொலி, தொலைக்காட்சி ஊடகத் துறைகளின் நாடகத் தயாரிப்புகள் அமையவேண்டுமென்ற நோக்கத்தில் பணியாற்றியவன்.  இன்று ‘யாதும் யாவரும்’ திரைப்படத்தைப் பார்த்தபோது, எமக்கான தனித்துவமான திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான காலம் ஆரம்பித்துவிட்டதென்ற நம்பிக்கை ஏற்பட்டது. 
அதுவே எனது மகிழ்ச்சிக்கான காரணம்.

‘யாதும் யாவரும்’ திரைப்படம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டொக்டர். ஜெயமோகனால் திரைக்கதையெழுதி, நெறிப்படுத்தித் தயாரிக்கப்பட்டது.  ஒரு தொழில்முறைத் தரத்துடன் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயமோகன் தனது பள்ளிப்பருவகாலத்திலிருந்து இலங்கை வானொலியில் நாடகங்கள் எழுதத் தொடங்கியவர்.  கே. எம். வாசகர் காலத்திலும் தொடர்ந்து எனது காலத்திலும் பல வானொலி நாடகங்களை எழுதியிருக்கிறார்.  
வானொலிக்கென ஜெயமோகன் எழுதி, நான் வானொலி நாடகமாகத் தயாரித்த ‘கற்பனைகள் கலையவில்லை’ என்ற நாடகத்தையே, இலங்கையில் ‘ரூபவாஹினி’ தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது முதல்முதலாகத் தொலைக்காட்சி நாடகமாகவும் தயாரித்தேன்.  இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம். 
ஜெயமோகன் இப்போது சிட்னியில் வைத்தியராகக் கடமையாற்றிக்கொண்டே மேடை, திரைப்பட நாடகங்களிலும் ஆர்வம்காட்டி உழைத்துவருபவர்.  அவர் இப்பொழுது ஒரு சிறந்த திரைப்பட இயக்குநராக உயர்ந்திருக்கிறார். ‘யாதும் யாவரும்’ ஜெயமோகனின் இரண்டாவது முழுநீளத் திரைப்படம். 
தனிமனித நுண்ணுணர்வுகளை, உறவுகளை மனோவியல் ரீதியாக உணர்ந்து, மிக யதார்த்தமாக எழுதக்கூடிய ஆற்றல்கொண்டவர் ஜெயமோகன்.  ‘யாதும் யாவரும்’ திரைப்படத்தில் தனிமனித உணர்வுகள், நாம் வாழும் சமூகத்தின் நிலைப்பாடுகள் காரணமாக எத்தகைய சிக்கல்களுக்குள்ளாகின்றன, அவர்களது வாழ்க்கை எந்தெந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்ற யதார்த்தமான கதையை எள்ளளவும் சிக்கலின்றி தெளிந்த நீரோடைபோலத் திரைக்கதையமைத்து, சீரியமுறையில் நெறிப்படுத்தியிருக்கிறார். எந்தவித மனஅழுத்தங்களுக்கும் ஆளாகாமல் ஆறுதலாக, நிம்மதியாகப் பார்த்து அனுபவிக்கக்கூடிய திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  
மிக முக்கியமாக ஈழத் தமிழ்ப் பேச்சுவளக்கை எவ்வளவு எளிதாகத் திரைப்படத்தில் பிரயோகிக்கலாமென்பதை ஜெயமோகன் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
நடித்தவர்கள் தொழில்முறை நடிகர்களல்லர்.  பிரதான பாத்திரங்களில் நடித்தவர்களில் ஷாமினியைத் தவிர ஏனையவர்கள் நடிப்புத் துறைக்குப் புதியவர்கள்.  அவர்களை வைத்து இத்தகைய தொழிற்தரம்மிக்க தயாரிப்பை மேற்கொள்வது இலகுவான செயலல்ல.  ஒன்றிரண்டு இடங்களில் இதை மேலும் சிறப்பாகச் செய்திருக்கலாமென்று தோன்றினாலும் திரைப்படம் தரும் முழுமையான திருப்தி எந்தக் குறைகளையும் பொருட்படுத்தமுடியாமற் செய்துவிடுகின்றது. 
இன்று நவம்பர் மாதம் 19ஆம் திகதி மதியம் ஒருமணிக் காட்சியாக மீண்டும் ஸ்காபரோ வூட்சைட் சினிமாவில் ‘யாதும் யாவரும்’ திரைப்படம் காண்பிக்கப்படவிருக்கிறது.  திரைப்பட ஆர்வலர்கள் அதிலும் ஈழத் தமிழ் மக்களின் திரைப்படங்கள் தரமானவையாக அமையவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்கள் நிச்சயம் இத்திரைப்படத்தைப் பார்க்கவேண்டும்.  திரைப்படக் கலையின் யதார்த்த அழகுணர்வை (Aesthetic) நீங்கள் அனுபவிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு  இருக்கிறது.
இத்திரைப்படத்தை உருவாக்கிய டொக்டர். ஜெயமோகனுக்கும் நடிகர்களுக்கும் மற்றும் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள்.

P Wikneswaran Paramananthan


 

Leave a Reply