• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதன்முதலில் நான் பார்த்த எம்.ஜி.ஆர். படம் மலைக்கள்ளன் 

சினிமா

‘முதன்முதலில் நான் பார்த்த எம்.ஜி.ஆர். படம் ‘மலைக்கள்ளன்’. அந்தப் படத்தில் ஸ்கார்ஃப் கட்டிக்கிட்டு, கட்டம்போட்ட சட்டை, பெல்ட்ல கத்தி சொருகி இருப்பார், காலில் செருப்பு போட்டிருப்பார். அது தான் நான் வரைந்த முதல் எம்.ஜி.ஆர். படம். அந்தப் படம் வரையும்போது எனக்கு 13 வயசு இருக்கும்.
அதேப்போல இரண்டாவதாக நான் வரைந்த எம்.ஜி.ஆர். படத்தையும் இன்றைக்கும் மறக்க முடியாது. எங்க கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சூலூர் என்ற ஊர் இருக்கு. அது கொஞ்சம் நாகரிகமான ஊரு. அந்தக் காலத்துல நிறைய தி.க.காரங்க அங்க இருந்தாங்க.
அங்க ஒரு சலூன் கடையில் எம்.ஜி.ஆர். படம் ஒண்னு மாட்டி இருக்கும். நல்ல புசுபுசுனு சுருட்ட முடியோட, முழுக்கை சட்டை, வேட்டி போட்டுக்கிட்டு ஒரு நாற்காலியில மேக்கப் இல்லாம எம்.ஜி.ஆர். உட்கார்ந்திருப்பார். அட்டகாசமான படம் அது.
“அந்தப் படத்தைக் கொடுய்யா… வரைஞ்சிட்டு தந்தர்றேன்”னு சலூன் கடைக்காரன் கிட்ட கேட்டா முடியவே முடியாதுன்னுட்டான். ரொம்ப கெஞ்சிக் கேட்டப்ப, என் சலூன்ல முடிவெட்டிக்க அப்ப தர்றேன்னான்.

அந்தக் காலத்துலலாம் கிராமத்துல ஒரு பழக்கம் இருந்துச்சு. முடி வெட்டிவிட வீட்டுக்கு ஒருத்தர் வருவார். அவர்கிட்ட தான் முடி வெட்டிக்கணும். எக்காரணத்தைக் கொண்டும் பக்கத்து ஊருக்குபோய் முடி வெட்டிக்கக் கூடாதுன்னு ஒரு சுயக்கட்டுப்பாடு இருந்துச்சு.
அதன் காரணமா, அந்த சலூன் கடைக்காரன் என் கடையில முடிவெட்டிக்கனு சொன்னப்ப முடியாதுனுட்டேன். அப்பப் படம் தர்ற முடியாதுன்னான்.
அந்த எம்.ஜி.ஆர். படத்தை எப்படியாவது வாங்கிடணும்னு வேற வழி தெரியாம, என் கற்பை இழப்பதைப் போன்ற மனநிலையில் அந்தக் கடையில் முடிவெட்டிக்கிட்டு எம்.ஜி.ஆர். படத்தை வாங்கிச் சென்று வரைந்தேன். அந்தப் படம் இன்றும் என்னிடம் பொக்கிஷமாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர். தன் பழக்க வழக்கத்தினாலும், நெறியான தன் வாழ்க்கை முறையினாலும் அந்தக் காலத்தில் என்னைப் போன்ற பல இளைஞர்களைக் கவர்ந்தவர். அவர் படங்களில் நல்ல செய்தி சொல்லுவார். தர்மம் வெல்லும் என்று சொல்வார். அவர் திரைப்படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் ஒரிஜனலாக இருக்கும். அம்மா மேல் பாசமாக இருப்பார். அவர் படப் பாடல்கள் நன்றாக இருக்கும்.
எம்.ஜி.ஆரை எனக்குப் பிடித்ததற்கு இப்படி எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமாக, எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகுவார். அன்பாக என்றால்…? என்னவென்று சொல்லணும் இல்லியா? இதோ செல்றேன் கேட்டுக்கங்க.
சிவகுமார் என்ற இளைஞன் நடிக்க வந்த புதிது. 1966 நவம்பர் மாசம் 14-ம் தேதி வாஹினி ஸ்டுடியோவில் முதன் முதலாக எம்.ஜி.ஆர். அவர்களுடன் ‘காவல்காரன்’ படத்தில் நடிக்கிறான். சுண்டக்கா பையன். எந்த நேரத்திலும் எம்.ஜி.ஆர். வரலாம் என்பதால் எல்லாரும் அலெர்ட்டா காத்துட்டு இருந்தாங்க. ஒரு போர்டிகோ செட்டில் வி.கே.ராமசாமியும், நம்பியாரும் உட்கார்ந்து பேசிகிட்டு இருக்காங்க.
எம்.ஜி.ஆர். வந்ததும் அவர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார். நான் மெதுவாக செட்டுக்குள்ள இருந்து எட்டிப் பார்க்குறேன். தயங்கித் தயங்கி அவர்கிட்ட வந்து நிற்கிறேன்.
யாரும் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தவில்லை. அதனால் வெட்கத்தில் குரல் கம்ம… “ண்ணே…” என்றழைக்கிறேன். சட்டுனு என்னைப் பார்த்தவர் சடாரென்று எழுந்து நின்று… “ஹேய்…” என்று குரல் கொடுத்ததும், அவனவன் அந்தரத்தில் தொங்குறான். எங்கிருந்தோ ஒரு சேர் பறந்து வருகிறது.
“அண்ணே நீங்க உட்காருங்க”னு சொல்றாங்க, “உஷ்…” என்று அவர்களுக்கு சைகை காட்டுகிறார். ஒரு சேர் வந்து அதில் நான் அமர்ந்த பிறகு தான் அவர் அமர்கிறார். சிவகுமார் என்ற ஒரு புது நடிகனுக்கு சேர் போட்டு உட்கார வைக்கணும்னு என்ன தேவை சார் அவருக்கு? நல்லா ஞாபகம் வச்சுக்குங்க. ஒரு பழக்கம் தான் குணமாகிறது. அந்தக் குணத்தால் தான் இன்றும் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமரந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அன்றைக்கு படப்பிடிப்பு தொடங்கி நடந்துகிட்டு இருக்கு, அப்ப ஒரு ஷாட் முடிஞ்சு வந்தவர் பேச்சு வாக்குல, “தம்பி ராமநாதா இங்க வா… இங்க பார் சிவகுமார் தம்பி முகத்துல கொஞ்சம் டார்க்கா இருக்குப் பார்… லேசா டச்சப் பண்ணு” என்றார்.
“அண்ணே… உங்க கலர் வேற, என் கலர் வேற” அப்டின்னேன் நான். உடனே, “ஐய்யய்யோ… நீ ஆர்ட்டிஸ்ட்பா… உன்கிட்ட கலர பத்தி பேசலப்பா” என்று நான் ஓவியன் என்பதை சுட்டிக் காட்டி அப்படி சொன்னார். நான் ஆர்ட்டிஸ்ட்னு தெரிஞ்சும் எவனும் அதைப்பத்தி என்கிட்ட பேசினதில்லை. அவர் அன்று சொன்னார். அப்புறம் சகஜமாக என்னிடம் பேசத் தொடங்கினார்.
“தம்பி நீ கோயமுத்தூர்னு கேள்விப்பட்டேன். சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாரு, அம்மா தான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்கனும் கேள்விப்பட்டேன். சினிமா ஒரு மாய உலகம். நிறைய தவறுகள் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. எச்சரிக்கையா நல்ல பையனா இருந்து அம்மாவை சந்தோஷப்படுத்துற மாதிரி பேர் வாங்கணும்” என்றெல்லாம் பேசினார்.
என்னடா எம்.ஜி.ஆர். நம்மகிட்ட இவ்வளவு சகஜமா பேசுறாரேனு எனக்கு அவரிடம் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமா விலகத் தொடங்கியது. நிறைய மனம்விட்டு பேசிக்கிட்டு இருந்தார்.
அப்போது அவரது அம்மாவைப் பற்றி பேசும்போது, “ஒரு ஆண் மகன்னா புலி சிங்கத்துக்கிட்ட உன் வீரத்தை காட்டணும். அம்பது மீட்டர் தள்ளிப்போய் விட்டாலும் திரும்ப வந்து உன் காலையே சுத்திட்டு திரியிற நாய்கிட்ட உன் வீரத்தை காட்டக்கூடாதுனு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க” என்றார்.

சிவக்குமார்!
 

 

Leave a Reply