• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா  பற்றி கமல்ஹாசன்...

சினிமா

கங்கை அமரன்தான் இளையராஜா என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த ஆரம்ப நினைவிலிருந்து தொடங்குகிறேன்..." 
"நீண்டநாள் வரை, இவரின் இயற்பெயர் எனக்குத் தெரியாது. முதலில் எனக்கு அறிமுகமானவர் கங்கை அமரன் அவர்கள்தான். மேடைக் கச்சேரி ஒன்றில், ‘`யார்னு தெரியுதா, பாவலர் பிரதர்ஸில் இருந்தவர். இவரோட அண்ணன்தான் பாவலர் வரதராஜன். கேள்விப் பட்டிருக்கீங்கில்ல?’’ என்று கேட்டு, கங்கை அமரனை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். ‘`ஓகே இவர்தான், ‘அன்னக்கிளி’க்கு இசையமைத்த இளையராஜா’’ என்று நானாகவே நினைத்துக்கொண்டேன். ஏனெனில், அவர்கள் அந்தளவுக்கு எனக்கு முன்பின் தெரியாதவர்கள். 
இளையராஜா, ‘அன்னக்கிளி’யைத் தொடர்ந்து ‘16 வயதினிலே’ படத்துக்கு இசையமைக்கப்போகிறார். அந்தச் சமயத்தில் சென்னை ஃபிலிம் சேம்பரில் நடைபெற்ற ‘அன்னக்கிளி’ வெற்றிவிழா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். விழா, ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தது. நான் மேடைக்குச் சென்றேன். ‘`ஒரு புதுப்புயல் வந்திருக்கிறது. இளையராஜா என்னும் அந்தப் புயல் அடுத்து உங்களுடன் பேசுவார்’’ என்று அறிவிக்கிறார்கள். அப்போது நான் இளையராஜா என்று நினைத்துக்கொண்டு கங்கை அமரனைப் பார்க்கிறேன். ‘ஏன் இன்னும் இவர் பேச எழாமல் உட்கார்ந்திருக்கிறார். ஒருவேளை, அழைத்தது கேட்கவில்லையோ’ என்று நினைத்துக்கொண்டு, ‘வாங்க, பேசுங்க’ என்பதுபோல் அமரிடம் கையால் சைகை செய்கிறேன்.
அதற்குள் அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னோர் இளைஞர் எழுந்து செல்கிறார். `இவரையும் எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே’ என்று எனக்குள் யோசனை ஓடிக்கொண்டே இருக்கிறது. ‘ஆமாம், இவர் நம் சலீல் சௌத்திரியிடம் கிடார் வாசித்துக்கொண்டிருந்தவர்’ என்று டக்கென நினைவு வந்தது- ‘ஓ... இவர்தான் இளையராஜாவா’ என்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். பிறகு அவரைச் சந்தித்தபோது, ‘நீங்க யாருனு தெரியாதுங்க. மன்னிக்கணும்’ என்றேன். ‘அதனாலென்ன, பரவாயில்லை.
இளையராஜா பற்றி ஒரு சம்பவம் சொல்வார்கள். அது எனக்கு மிகவும் பிடித்த சம்பவம். நான் அப்போது பயங்கர பிஸி. எந்தளவுக்கு என்றால், என் பட பூஜைக்குப்போவதற்குக்கூட நேரம் இருக்காது. கேரளாவின் எங்கோ ஓரிடத்தில் மலையாளப் படப்பிடிப்பில் இருப்பேன். ‘16 வயதினிலே’க்கு முன் 1975-ம் ஆண்டில் மட்டும் தமிழ், மலையாளம் இரண்டிலும் சேர்த்து, கிட்டத்தட்ட என் 22 படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தன. அப்படி வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஸ்டுடியோவிலேயே படுத்துத் தூங்குவேன். அப்போது இவரைப்பற்றி ஸ்டுடியோக்களில் பேசிக்கொள்வார்கள்.  `‘தெரியுமா, ‘அன்னக்கிளி’ மியூசிக் டைரக்டர், முதல்நாள் பூஜை அன்னிக்கு, ஒன், டூ, த்ரீனு சொன்னார். கரன்ட் கட் ஆகி விளக்கெல்லாம் அணைஞ்சிடுச்சு. அப்படி ‘பூஜை அன்னிக்கு விளக்கு அணைஞ்சுபோன’ அவரைத்தான் கமலோட ‘16 வயதினிலே’ படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க’’ என்று கிசுகிசுப்பார்கள். இந்த மூடநம்பிக்கைக்கு சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன? நான் குதர்க்கவாதி என்பது தெரிந்தும், சமயத்தில் இதை என்னிடமே சொல்வார்கள். `‘அப்ப நல்லதுதானே, அவர்தான் நமக்கு வேணும்’’ என்பேன். 
‘16 வயதினிலே’ பாடல்கள் ரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்தபோது, வெவ்வேறு பட வேலைகளுக்காக வெவ்வேறு ரெக்கார்டிங்கில் நானும் ஏ.வி.எம் ஸ்டுடியோவில்தான் இருப்பேன்.  திரு.பாலசந்தர் அவர்களிடமும் திரு. அனந்துவிடமும், ‘`நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அதை இல்லைனு மறுக்க முடியாது. ஆனால், இது புது ஒலியா இருக்குங்க. கூடவே அந்த ஆளின் எனர்ஜி... அவரோட இயக்கமே ரொம்ப வித்தியாசமாக இருக்கு’’ என்பேன். `‘யோவ், என்னய்யா, சும்மா சும்மா இளையராஜா, இளையராஜாங்கற...’’ என்று பாலசந்தர் அவர்கள் ராஜாவை விசாரிக்க ஆரம்பித்தார். ‘`என்னது, ராஜாவை அவருக்குத் தெரியாதா?’’ என்று அதிராதீர்கள். அது இன்றைய சமூக வலைதளக் காலமல்ல. தகவல்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் பரவும். ஆனால், அதன்பிறகு அவரைப்பற்றிப் பேசுவதற்குத் தேவையே இல்லை என்கிற அளவுக்கு அவருக்குப் புகழ் வந்து சேர்ந்தது. 
அப்போது, ‘ஏன் எப்போதும் தபேலாவைப் போட்டு உருட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப்போன்ற சத்தங்கள் நம் படங்களில் வந்தால் எப்படி இருக்கும்?’ நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனெனில், எப்போதோ ஒருமுறைதான் பாலசந்தர் சார் படங்களில் எம்.எஸ்.வி-க்கே வாய்ப்பு கொடுப்பார்கள். அப்படித்தான் மகாதேவன் அவர்களுக்கும். அந்த வாய்ப்புகளிலும் அவர்களுடைய திறமையைக் காட்டும் படங்கள் அரிதாகவே அமையும். அது எல்லாப் படங்களிலும் அமைந்துவிடாது. இது நடிகர் திலகம் அவர்களுக்கும் பொருந்தும். `‘போதும் போதும். நல்லா ஓடிட்டு இருக்கிற வியாபாரத்தில் புதுசா பண்றேன்னு ஏன் காரியத்தைக் கெடுக்குறீங்க? மாடுன்னா வண்டியில பூட்டினா நேரா வீடுபோய்ச் சேரவேணாமா? எதுக்கு நடுவுல இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்கணும்? நுகத்தடிக்கு மரியாதையே இல்லாத ஆளா இருக்கியேப்பா’’ என்பார்கள்.

ஆனால், இதில் முண்டியடித்துக் கதவுகளை எல்லாம் உடைத்துக்கொண்டு வந்தவர் இளையராஜா. ஆமாம், அந்தச் செக்குமாடாக இருப்பதை மறுத்து ஓட முற்பட்டவர்களில் இளையராஜா முதன்மையானவர். அவர் மக்கள் இயக்கத்தின் வழி வந்தவர் என்பதால், எளிய இந்தியனுக்கும் புரியும் வகையிலும் வியாபார ரீதியிலும் வெற்றிபெறக்கூடிய பாடல்களை அமைத்தார். ஆமாம், அவரின் பாடல்களில் ஒரு கிராமத்தானுக்கு வேண்டிய எளிமையும் ஓர் இந்தியனுக்கு வேண்டிய திமிரும் இருந்தது. அவர் ஓர் அகில உலக இந்தியர். அந்தக் குணம்தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு மனிதர் எப்படி இந்தியா முழுமைக்குமான இசையைத் தருகிறார் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இசையின் அடிப்படை அறிந்தவன் என்ற முறையில் எனக்கு அது வியப்பாகவும் இருக்கும். 
‘யார் இந்தப் பையன்’ என்று கேட்டவர்கள் எல்லாம், ‘சார்’ என்று சொல்லும் வயது ராஜாவுக்கு வந்துவிட்டது. இருந்தாலும், தான் கற்ற இசை போதாது என்று நினைத்தாரா, கற்றது கைம்மண் அளவு என்று நினைத்தாரா என்று எனக்குத் தெரியாது. கர்னாடக சங்கீத வகுப்புக்குப் போவார். அந்தக் காலகட்டத்தில் ``வாங்க, எக்ஸர்சைஸ் பண்ணலாம்’’ என்று அவரை அழைப்பேன். என்னுடன் பீச்சுக்கெல்லாம் வருவார். ‘`எங்குபோயிட்டு ஆறரை மணிக்கு வர்றீங்க’’ என்றால், ‘`பாட்டு கிளாஸுக்குப் போயிட்டு வர்றேன்’’ என்பார். எனக்கு வியப்பாக இருக்கும். `இவர்ட்ட போய் நாம் பாடம் படிக்கலாம்னு நினைக்கும்போது இவர் வேறு ஒருவரிடம் இசை வகுப்புக்குப் போகிறாரே’ என்ற வியப்பு.
அவர் உச்சத்தில் இருந்த அந்தச் சமயத்தில் இரவு 11 மணிக்கு வேலையை முடித்துவிட்டு அதிகாலை நாலரைக்கு எழுந்து ஐந்து மணிக்கு டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்னாடக சங்கீத வகுப்புக்குப் போவார். அவர் இவரை மிகப்பெரிதாக மதிக்கும் கலைஞர். டிவிஜியும் இவருக்கு ஆகச்சிறந்த ஆசான். ‘ராஜபார்வை’யில் அவரை ஓர் ஆலாபனை பாடவைத்தார். ‘அந்திமழை’ பாடலில் வரும் மிருதங்க தொனியும் அவருடையதுதான். அவை இரண்டையும் அந்தப் பாடலில் எனக்கு அமைத்துக்கொடுத்தவர் ராஜாதான். 
என் 100வது படம், நான் தயாரிக்கும் முதல் படம் ‘ராஜபார்வை’க்காக ராஜாவுடன் கம்போஸிங். அப்போது ஒரு டியூன் போடுகிறார். ‘இது ம் ஓகே’ என்றேன். அப்போது சிங்கீதம் சார், ‘இருங்க, அப்படி கொடுத்ததும் வாங்கிட்டு வந்துடக்கூடாது. நாம இன்னும் கேட்கணும்’ என்றார். உடனே கிடுகிடுவென ஒன்பது டியூன்கள் போட்டார். பிறகு, ‘நான் புறப்படட்டுமா’ என்று, வேறு வேலையாகப்போய்விட்டார். அதாவது மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு ஒரு டியூன் என அந்த ஒன்பது டியூன்களுக்கும் அவர் எடுத்துக்கொண்டது, வெறும் அரைமணி நேரம்தான். சிங்கீதமும் நானும் அந்த ஒன்பது டியூன்களையும் இரவு முழுக்கத் தூங்காமல் திரும்பத் திரும்பக் கேட்டோம். காலையில் சிங்கீதம் போன் செய்து, ‘நீங்க சொன்னதுதான் சரி. அந்த முதல் டியூனே நல்லா இருக்கு. அதில்தான் ரீங்காரம் இருக்கு’ என்றார். அவர் ஓரளவுக்கு இசையறிந்தவர். படங்களுக்கு இசையமைப்பும் செய்திருக்கிறார்.
இப்படி இளையராஜாவுக்கு இசை எளிமையாக இலகுவாக வந்துவிடும். உதிர்த்துவிட்டுப் போய்விடுவார். அதைவைத்துக்கொண்டு நாம் வருடக்கணக்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘இது வேண்டாம்’ என்றால், மல்லுக்கட்ட மாட்டார். அடுத்தடுத்து என்று போய்விடுவார். அப்படி நானும் அவருடன் போயிருந்தால் ‘அந்திமழை’ எங்களுக்கு இல்லாமலேயே போயிருக்கும். இப்படி அவரின் டியூன்களைப் பிடித்து வைத்துக்கொண்டால்தான் உண்டு. இல்லையென்றால், அது வெவ்வேறு ரூபங்களில் மாறி அவரின் வெவ்வேறு படங்களில் துண்டு துண்டாகப்போய்விடும். ஆமாம், அற்புதமான அந்த டியூன்கள் வேறு கமர்ஷியல் படங்களுக்கு விறகாகிவிடும். அற்புதமான சந்தனமரத்தின் வாசம் நமக்குப் புரியாவிட்டாலும், அவர் அதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் வெட்டிக்கொடுத்துவிடுவார். ஆமாம், கமர்ஷியலோ கதைப்படமோ, வருவதைப் பகிர்ந்தளித்தபடி போய்க் கொண்டே இருப்பார்; ஒளித்துவைக்கவே மாட்டார். 
இல்லைங்க, ஒவ்வொரு டியூனையும் அப்படி விட்டுடக் கூடாது’ என்பேன். அவரின் பட ரீரெக்கார்டிங்கை எல்லாம் நினைவுவைத்துக் கொண்டு, ‘`இந்த ரீரெக்கார்டிங்கையே பாட்டா போடலாம்ங்க’ என்பேன். ‘`அப்படியா, போட்டா போச்சு” என்று தயாராவார். ‘ராஜாவிடம் பேசமுடியாது, கோபக்காரர்’ என்பார்கள். ஆனால், எனக்கு அப்படித் தெரிந்ததே இல்லை. பாரதிராஜாவுக்கு அவர் என்ன சுதந்திரம் கொடுத்திருந்தாரோ, அதே அளவு சுதந்திரம் எனக்கும் தந்திருந்தார். ஆனால், அவர்கள் வாடாபோடா நண்பர்கள். நான் ஆரம்பத்திலிருந்தே ‘சார்’ என்று அழைத்துவந்தவன்.  உறவு வலுத்துவிட்டதால் மரியாதையைக் குறைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாதே. 

 

Paravasam Nayagan
 

Leave a Reply