• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரைப்படம் உருவான கதை

சினிமா

சிவாஜி கணேசன் ‘இரண்டில் ஒன்று’  நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகத்தை சிவாஜியின் நண்பர் எஸ்.ஏ. கண்ணன் இயக்கியிருந்தார். எஸ்.பி. சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்திருந்தார். அது 42வது முறையாக அன்று அரங்கேறியிருந்தது. நாடகத்தை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி ரசிகர்களின் கைத்தட்டலையும், ஆரவாரத்தையும் கூட கவனித்தார். நாடகம் முடிந்ததும் மேடைக்கு போனார் சிவாஜி. எஸ்.ஏ. கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்தார்.

`நாளைக்கு எங்கே நாடகம்?’ என்று கேட்டார். சொன்னார்கள். `நாளையோட நாடகத்தை நிறுத்திக்குங்க. அப்புறம் இந்த நாடகத்தை நம்ப சிவாஜி நாடக  மன்றம் நடத்தும்.  எஸ்.பி. சவுத்ரி நான்தான்’. அவர் அப்படிச் சொல்ல சொல்ல அவர்கள் இருவரும் திகைத்தனர். அடுத்ததாக ` சரி! நாடக ஆசிரியர் எங்கே?’ என்றார்.

மகேந்திரனை கொண்டு போய் அவர் எதிரே நிறுத்தினார்கள். `உங்களை இதுக்கு  முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே?’ என்றார் நடிகர் திலகம். `நான் எழுதிய ‘நிறைகுடம்’ பட பூஜையில்.. உங்களிடம் என்னை இயக்குநர் முக்தா சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்’ என்றார் மகேந்திரன்.

`சரி! ஆசிரியரே… நாளைக்கு நாடகம் நடக்கும்போது நான் மேடையில்  ‘சைடு ஸ்டே’ஜில் இருப்பேன். நீங்களும் எனக்கு பக்கத்தில் இருக்கவேண்டும். எனக்குத் தோன்றுகிற சில ஐடியாக்களைச் சொல்கிறேன்’ என்றார்.

அதன்படியே மறுநாள் நடந்தது.  அவருக்கு அருகில் மகேந்திரன் அமர்ந்திருந்தார்.  நாடகம் முடியும் வரை மகேந்திரனிடம் சிவாஜி எதுவும் பேசவில்லை. கடைசியில் `அந்த படவா ராஸ்கலை நான் (சவுத்ரி) சுட்டுக்கொல்ல வேண்டும்! என்ன சொல்றீங்க?’ என்றார். மகேந்திரனும் `சரி’ என்றார். ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தின் இறுதியில் கவர்னரிடம் தங்கப்பதக்கம் வாங்கும் ஒரு நாளில்  எஸ்.பி. சவுத்ரி தற்கொலை செய்து கொள்வார்.அதாவது தன்னை பழிவாங்க நினைக்கும் முயற்சியில், மகன் தனது வாழ்க்கையை  அழித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக! இதைத்தான் நடிகர் திலகம் மாற்ற வேண்டுமென்றார். இப்படித்தான் ‘இரண்டில் ஒன்று’ நாடகம் ‘தங்கப் பதக்கம்’ ஆனது. மூன்றே நாட்கள்தான். நாடகப் பிரதியைப் படிக்கச் சொல்லி, கொண்டே கண்மூடிக் கேட்பார்.  அவ்வளவுதான், நான்காம் நாள் கிராண்ட் ரிகர்சல் ( இறுதி ஒத்திகை). மறுநாள், மியூசிக் அகாடமியில் ‘தங்கப் பதக்கம்’ நாடகம் அரங்கேற்றம். சென்னை நகரம் முழுவதும் திரைப்பட போஸ்டர் மாதிரி ‘தங்கப் பதக்கம்’ நாடக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு,  ரசிகர்களது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. பெருந்தலைவர் காமராஜர் நாடகம் பார்க்க வந்திருந்தார்.  மகேந்திரன் `கிரீன்’ ரூமுக்கு  போய் சிவாஜியை எட்ட நின்று பார்த்தார். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர் உடம்பு எகு போல நிமிர்கிறது.

மூன்று நாட்கள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் இவர் எப்படி வசனம் பேச போகிறார் என்பது மாதிரியான சந்தேகக் கேள்விகளை  மகேந்திரனுக்குள் எழுந்தது. அரங்கில் மணியடித்தது. நாடகம் தொடங்கியது. மகேந்திரன் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை.

மகேந்திரனின் வசனத்திற்கு தனது நடிப்பு ஆற்றலால், குரல் வளத்தால், அதை உன்னதமாக பயன்படுத்த தெரிந்த மேடை அனுபவத்தால், புதியதோர்  அழகையும்,  உயிரோட்டத்தையும்  கம்பீரத்தையும்  சிவாஜி படைத்துக் காட்டியபோது மகேந்திரன் வியந்தே போனார்.

மகேந்திரனுக்குள் அப்படியொரு பிரமிப்பு! நாடகம் முடியும் வரை அமோகமான  கைத்தட்டல்கள் ஓயவில்லை. நாடகம் முடிந்ததும், மகேந்திரன் `கிரீன்’ ரூமுக்குப் போனார். ஒப்பனை கலைக்கப்பட்டு களைப்புடன் அமர்ந்திருந்தார் நடிகர் திலகம்.

நாடகம் முழுக்க  அவர் காட்டிய கம்பீரத்துக்கும்  ஒப்பற்ற நடிப்புக்கும் அவர் தனது உடலின் சக்தி மொத்தத்தையும் செலவழித்திருந்தார். ஒப்பனை கலைவது வரை  சவுத்ரியாக வாழ்ந்தவர், இப்போது தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகிவிட்டார்.
மகேந்திரனைப் பார்த்ததும், `என்னப்பா உன் டயலாக்கையெல்லாம் நான் ஒழுங்காக பேசினேனா?’ என்று ஒரு மாணவனைப் போலக் கேட்டார்.
மாபெரும் நடிகர்! மகேந்திரனின் கண்கள் கலங்கின. மனம் சிலிர்த்தது.

‘தங்கப் பதக்கம்’ நாடகம் இந்தியா முழுக்க நடைபெற்று இணையற்ற வெற்றியை ஈட்டியது. அதன் பிறகு மும்பையில் நடந்த நாடகத்திற்கு மட்டும்தான் மகேந்திரனால் போக முடிந்தது. நடிகர் ராஜ்கபூர் உட்பட மற்ற பிரபல நடிகர்களில் பெரும்பாலானோர் சிவாஜியின் காலை தொட்டு வணங்கி, அவரது நடிப்பின் மேன்மையை  ஆராதித்த காட்சியை மகேந்திரனால் இன்றும் மறக்க முடியவில்லை. அது சிவாஜி என்ற மகா கலைஞனது மொழி தாண்டிய  அற்புத நடிப்பாற்றலின்  வல்லமையை மட்டுமல்ல,  நாடகக்கலையின்  சிறப்பையும் உன்னதத்தையும்  மகேந்திரனுக்கு ஆழமாக உணர்த்தியது. ‘தங்கப் பதக்கம்’ 100 வது நாள் நாடகத்தின்போது மேடையில் மகேந்திரனுக்கு மோதிரம் அணிவித்து மரியாதை செய்து மகிழ்ந்தார் நடிகர் திலகம். இப்படி உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் தங்கப்பதக்கம் என்ற மகா வெற்றி படம்.

Leave a Reply