• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம் - மனம் திறந்தார் சரத்வீரசேகர

இலங்கை

முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், என்னை அந்த நேரத்திலேயே கைது செய்திருக்கலாம் என  நாடாளுமன் உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பாக  நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”2 ஆயிரம் வருடங்கள் பழைமையான எமது பௌத்த புராதானச் சின்னத்தில், பொங்கல் வைத்து வழிபட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு நீதிபதியுடன் பேசிய காரணத்தினால், நானும் எனது கருத்துக்களை முன்வைக்க நீதிபதியிடம் அனுமதி கேட்டிருந்தேன்.

எனினும், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.நான் முன்னாள் இராணுவ அதிகாரி என்பதாலும், எனக்கு சட்டங்கள் தெரியும் என்பதாலும், நீதிபதியொருவர் கருத்து வெளியிட மறுத்தமையால், நானும் அமைதியாகிவிட்டேன். நாடாளுமன்றிலும், குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த அனுமதியளித்தமை தவறு என்றும் இது இந்து- பௌத்த மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றுதான் கூறியிருந்தேன். இதனை நான் இன்றும் கூறுவேன். இது எப்படி அச்சுறுத்தலாகும்?

அந்த சம்பவத்திற்குப் பின்னர் நான் குறித்த நீதிபதியை சந்திக்கக்கூட இல்லை.முல்லைத்தீவு, நீதிபதிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் 5 வழக்குகள் உள்ளன.இந்த வழக்குகள் தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாக தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சட்டமா அதிபரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், அவரது தீர்ப்பை மாற்றுமாறு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது தெரிவித்துள்ளது.

அப்படி அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால், அவர் இதுதொடர்பாக பிடியாணையொன்ற பிறப்பித்திருக்கவும் முடியும்.
அவர் வெளிநாடு செல்வதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக, அவரது வாகனத்தை விற்பனை செய்து, வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரை அவர் சந்தித்துள்ளார்.பொலிஸ் பாதுகாப்பும் அவருக்கு குறைக்கப்படவில்லை என பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவரது மனைவியோ, இவரால் தனக்கு தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுவதாக நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையே அளித்துள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸிலும், இதுதொடர்பாக அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.இதில், குறித்த நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மனநல வைத்தியர்கள், இவருக்கு வைத்தியம் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி கூறுவாராயின், அது யாரால் என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவேண்டும். ஜனாதிபதி, பொலிஸ் அமைச்சர் உள்ளிட்டோர், இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்ய குழுக்களை நியமித்துள்ளனர்.

இந்தக் குழுக்கள் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை செய்து, உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று நாமும் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply