• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருப்பின கர்ப்பிணியை சுட்டு கொன்ற காவல்துறை: வீடியோ காட்சி வெளியீடு

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் ஆகஸ்ட் 24 அன்று கருப்பர் இனத்தை சேர்ந்த 21 வயது டாகியா யங் எனும் கர்ப்பிணி, தனது கருப்பு நிற செடான் ரக காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குற்ற விசாரணைக்காக அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டி இருந்ததால் அவர் சென்று கொண்டிருந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். டாகியா காரை நிறுத்தியதும் அவரை காரிலிருந்து இறங்குமாறு கூறினர். ஆனால், இதற்கு டாகியா உடன்பட மறுத்தார். அதற்கு ஒரு காவல் அதிகாரி, "நீங்கள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறீர்கள். இங்கிருந்து தயவு செய்து போகாதீர்கள்" என உத்தரவிட்டார். மீண்டும் மறுத்த டாகியா காரை ஓட்ட முயன்றார்.

உடனே ஒரு காவல் அதிகாரி அவரது காருக்கு முன்னே சென்று, ஒரு துப்பாக்கியை காட்டி டாகியாவை அச்சுறுத்தினார். அதனையும் அலட்சியபடுத்திய, டாகியா காரை ஓட்ட தொடங்கினார். கார் வேகமெடுத்ததால், ஒரு காவல் அதிகாரி அவரை நோக்கி சுட்டார். இதில் தறிகெட்டு ஓடிய அந்த கார் ஒரு சுவற்றின் மீது மோதி நின்றது. அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியாக காரின் கதவை ஒரு அதிகாரி திறக்க முயன்றும் அது முடியாததால், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். அப்போது டாகியா மற்றும் அவரது கருவில் இருந்த சிசுவும் காரிலேயே உயிரிழந்து விட்டது. இதனையடுத்து, ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாயாகவும் மற்றும் 2 மாதங்களில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆக இருந்த ஒரு கர்ப்பிணியை கொன்ற குற்றச்சாட்டில் அந்த அதிகாரிகள் ஊதியத்துடன் கூடிய நிர்வாக விடுப்பில் பணியிலிருந்து அனுப்பப்பட்டனர். ஓஹியோ மாநில குற்ற விசாரணை துறை இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே, ஓஹியோ காவல்துறை இந்த நிகழ்ச்சியை படம் பிடித்திருந்த ஒரு காவலரின் கவச உடையில் தைக்கப்பட்ட வீடியோ கேமிராவின் காட்சிகளை வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. கருப்பர் இன மக்கள் மீது அமெரிக்க காவல்துறை அண்மை காலங்களில் குற்ற நடவடிக்கைகளின் போது மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக இணையத்தில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply