• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு

இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் சபரகமுவ தென் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் இன்று  100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடிய சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை காரணமாக கடல் பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்திரயங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.

குறித்த பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply