• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க நடவடிக்கை - ஜனாதிபதி

இந்நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை என்ற தலைப்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிபுணர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் செயற்பட்டமை போன்று, உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக நாமும் தனித்து முன்னேற முயற்சிக்க வேண்டும்.

ஐரோப்பாவின் பொருளாதாரம் இன்றளவிலும் சரிவை எதிர்கொள்கிறது. மறுமுனையில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக அமெரிக்கா இருந்த நிலையை விடவும் தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டுவருகிறது. சீனா இன்னும் மீண்டு வரவில்லை. எனவே, உலகப் பொருளாதார முன்னேற்றம் தடைப்பட்டுள்ளதுடன், அதனால் பெரும் பாதிப்புக்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

அவ்வாறென்றால், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நாம் எவ்வாறு நிதியைப் பெற்றுக்கொள்வது? மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிக்கவும் உலகளாவிய நிதிக் கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நிதி நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் முறைமைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த இலக்குகளை அடைவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

2030ஆம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், 2050ஆம் ஆண்டாகும் போது காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடைவதற்குத் தேவையான நிகழ்ச்சி நிரலை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கும் அனைத்து நாடுகளின் ஆதரவையும் ஐநா பொதுச்செயலாளர் அண்மையில் கோரியிருந்தார்.

இவை அனைத்திற்கும் தேவையான வளங்களைக் கண்டறியும் திறன் நமக்கு இருக்க வேண்டும். இதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருக்கும் நிதி போதுமானதாக இருக்கும் என்று சிலர் நினைத்தனர். ஆனால் அந்த நாடுகள் அதற்கு முன்வரவில்லை.

மேலும், தற்போது அவர்களிடம் அதற்கான வளங்கள் போதுமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது தொடர்பாகவும் கவனம் செலுத்தி, இந்த நிதி மூலங்களைக் கண்டறிவது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

மேலும், இதற்காக, பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளிடமிருந்து மட்டுமன்றி, தனியார் துறையிலிருந்தும் நிதி நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த வகையில் முதலீடுகளுக்கும் பிணைமுறிகளை வெளியிடுவதற்குமான வாய்ப்புக்களை தனியார் துறைக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.

2019 இல் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய, மொத்தத் தேசிய உற்பத்தியில் 9 சதவீதத்தை மாத்திரம் வைத்திருப்பதே எமது தேவையாக இருந்தது. ஆனால் தற்போது, இந்தப் பின்னணியிலும், காலநிலை மாற்ற இலக்குகளுக்காக நாம் நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது.

நாம் தொடர்ந்தும் முன்பு இருந்தது போன்று சிறிய பொருளாதாரமாக செயல்பட முடியாது. நாம் நமது பொருளாதாரத்தை விஸ்தரிக்க வேண்டும். இதற்காக புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

இதற்குத் தேவையான வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அபிவிருத்தி இலக்குகளை அடைய கூட்டாகவும் குழுவாகவும் செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply