• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓமானுக்குள் வரவேண்டாம் - இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை

உறுதிபடுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்குள் வரவேண்டாம் என்று ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சு மற்றும் அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் ஆகியன இணைந்து அங்கு சிக்கியிருந்த 32 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளன.

இதுதொடர்பாக ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதக் கடத்தல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று இலங்கையர்களிடம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைந்ததுடன் பின்னர் சரியான வேலைவாய்ப்பைப் பெறாமல், விசா காலம் முடிந்த பின்னரும் ஓமானில் தங்கியிருந்த நிலையிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது

கடந்த நவம்பர் மாதம் முதல் ஓமான் நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் அங்கு சிக்கியிருந்த 400 இக்கும் மேற்பட்ட இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளதாக இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து மனித கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இன்றி வருகை தரவோ அல்லது சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வரவோ வேண்டாம் எனவும் அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, அனைத்து இலங்கையர்களையும் உரிமம் பெற்ற முகவர்கள் ஊடாக மாத்திரம் தொழில்களை தேடுமாறும் ஓமானுக்கு வருவதற்கு முன்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில், தங்களை பதிவு செய்யுமாறும் ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் கோரியுள்ளது.

Leave a Reply