• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொனால்டு டிரம்புக்கு விஷம் அனுப்பிய கனேடிய பெண்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு விஷம் கலந்த கடிதங்களை அனுப்பிய விவகாரத்தில் கனேடிய பெண் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயிரைக் கொல்லும் கடிதம்

உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் 56 வயதான கனேடிய பெண் பாஸ்கேல் ஃபெரியர் என்பவர் கடந்த ஜனவரி மாதமே தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டார்.

டொனால்டு டிரம்ப் பெயரில் குறித்த பெண் அனுப்பிய உயிரைக் கொல்லும் அந்த கடிதம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும் முன்னர் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

2020 செப்டம்பர் மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பாஸ்கேல் ஃபெரியர் தெரிவிக்கையில், தமது திட்டம் தோல்வியடைந்ததில் வருந்துகிறேன், தம்மால் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாமல் போனது என்றார்.

தம்மை ஒரு சமூக ஆர்வலராக கருதுவதாகவும், தாம் பயங்கரவாதி அல்ல எனவும் நீதிமன்றத்தில் பாஸ்கேல் ஃபெரியர் விளக்கமளித்துள்ளார். டிரம்புக்கு அனுப்பிய கடிதத்தில், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிவிட பாஸ்கேல் ஃபெரியர் கோரிக்கை வைத்திருந்தார்.

262 மாதங்கள் தண்டனை

மேலும், எஃப்.பி.ஐ அதிகாரிகள் அந்த கடிதத்தில் பாஸ்கேல் ஃபெரியரின் விரல் ரேகைகளை உறுதி செய்திருந்தனர். மட்டுமின்றி, டிரம்பை ஒரு கோமாளி என்றே பாஸ்கேல் ஃபெரியர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து மாவட்ட நீதிபதி Dabney Friedrich ஃபெரியருக்கு 262 மாதங்கள் தண்டனை விதித்தார்.

22 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்த பின்னர், அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவதுடன், ஆயுளுக்கும் இனி அமெரிக்காவில் திரும்பாதபடி கண்காணிக்கப்படுவார் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவரது நடவடிக்கை என்பது உயிரைப் பறிக்கும் செயல் எனவும், தனக்கே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதுடன் சமூகத்திற்கும் ஆபத்தை விழைவிக்கக் கூடியது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் மற்றும் கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்ட பாஸ்கேல் ஃபெரியர் செப்டம்பர் 2020ல் நியூயார்க்கின் பஃபேலோவில் எல்லையைத் தாண்டும் போது கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, கத்தி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், கியூபெக்கில் உள்ள அவரது குடியிருப்பில் வைத்து ரிசின் என்ற விஷத்தை தயாரித்ததாக ஒப்புக்கொண்டார்.

ரிசின் விஷத்திற்கு மாற்று மருந்து என எதுவும் இல்லை. அதன் அளவைப் பொறுத்து, 36 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply