• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வறட்சியினால் பாதிப்பு

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது அதிக வெப்பநிலை நிலவி வரும் நிலையில் இதனால் அதிக வரட்சி ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் நிலவும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளதுடன், குழாய் மூலமான குடிநீர் வழங்கப்படாத கிராமப்பபுறங்களில் மக்கள் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 14 கிராமசேவையாளர் பிரிவுகளில் 3 வவுச்சர்கள் மூலம் தினமும் 20,000 லீற்றர் குடிநீர் மக்களுக்கு வழங்கி வருவதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபை நிருவாகம் தெரிவிக்கின்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரைக்கும் மேற்கொள்ளப்படும் என பிரதேச சபை மேலும் தெரிவிக்கின்றது.

மேலும் நிலவிவரும் அதிக வெப்பம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பொறுகாமம், வெல்லாவெளி, பழுகாமம் உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளன.

அதிக வெய்யில் காரணமாக சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதால், அப்பகுதியிலுள்ள கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகின்றது.
 

Leave a Reply