• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெல்லிசை மன்னர் நினைவுகள் 41 

சினிமா

A.V.M. C தியேட்டர் நிசப்தத்தில் மூழ்கியது. மன்னர் சேரில் அமர்ந்திருக்க  எதிரே உள்ள திரையில் படம் ஓடத் தொடங்கியது. எனது அக்கா மகன்கள் ஹரிஹரன் வெங்கட்ராமன் மற்றும் ராமகிருஷ்ணனுடன் உள்ளே வந்த நான் ஒரு ஓரமாக அமர, எதிரே திரையில் ஒரு காட்சி. படத்தின் பெயர் ஐயர் தி கிரேட். மலையாளப் படம். வீட்டில் வளர்க்கும் கிளி ஒன்று பறந்து போய் மரத்தின் உச்சியில் அமர மெகா ஸ்டார் மம்மூட்டி ஏணி ஒன்றை வைத்து  மரத்தின் மீது ஏற துவங்குகிறார்.கீழே அவரது மனைவி கீதாவும் தாயார் சுகுமாரியும் நிற்கின்றனர்.மரத்தில் உள்ள கிளி ஒரு கிளையிலிருத்து மற்றொரு கிளைக்கு தாவ  மம்மூட்டி மரத்தின் உச்சிக்கு ஏற முயல்கிறார். கீழே நிற்கும் மனைவியும் தாயாரும் பதறுகின்றனர்.திடீரென்று மம்மூட்டிக்கு கால் இடற, தலை சுற்றுகிறது. மரத்தை இறுக்கி பிடித்தபடி நிற்கிறார். அவரது மனைவி தீயணைப்பு துறைக்கு போன் செய்ய, அவர்கள் மம்மூட்டியை கீழே இறக்குகின்றனர். வீட்டிற்குள் மம்மூட்டி நுழையும் போது ஒரு பல்லி அவர் முன் விழுகிறது.அதை பார்த்து அதிர்ச்சி அடையும் அவர், உள்ளே வந்து சோபாவில் அமர அந்த பல்லி அவர் காலருகே ஓடுகிறது. மம்மூட்டி முகத்தில் ஒரு கலவரத்துடன் அந்த பல்லியை பார்க்கிறார். காட்சி முடிகிறது. 

மன்னர் ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அடுத்த நிமிடம் வாத்திய கலைஞர்களிடம்  சென்று வாயால் இசைத்துக் காட்டி அவர்களை வாசிக்க செய்கிறார். ஒரு கால அளவை தீர்மானித்து அந்தந்த கருவிகளை அந்தந்த அளவு மட்டுமே வாசிக்க செய்கிறார். கிளி பறக்கும் எபக்ட் கொடுக்க சொல்கிறார். அதிர்ச்சியை குறிக்கும் ஒரு எபக்டை இரு முறை வாசிக்க வைக்கிறார். ஒன் டூ என்றதும் மன்னர் கொடுத்த குறிப்பு படி அதே கால அளவிற்கு வாசிக்கின்றனர். கிளி பறக்கிறது. அதிர்ச்சி தரும் எபக்ட் இரு முறை வருகிறது. டேக் போகிறார் மன்னர். மீண்டும் திரையில் படம் ஓட மம்மூட்டி மரத்தில் ஏற மன்னர் கொடுத்த கால அளவின் படி வாசிக்கின்றனர். அந்தந்த இடத்திற்கு அந்தந்த அளவிற்கு இசை கனக் கச்சிதமாக அமர்கிறது. மம்மூட்டி மர்த்தடியில் இருந்து வீட்டினுள் நுழையும் அந்த பதினைந்து நொடிகள் அமைதி  மன்னர் விரல் சொடுக்க அதிர்ச்சி எபக்டுடன் திரையில் பல்லி விழுகிறது. மம்மூட்டி சோபாவில் அமர அதிர்ச்சி எபக்ட்டுடன் பல்லி ஓட முகத்தில் ஒரு கலவரத்துடன் பல்லியை பார்க்க இசை முடிகிறது.

மன்னரின் பின்னணி இசை கோர்ப்பை பார்த்த ஹரிஹரனும் ராமகிருஷ்ணனும் வாயடைத்து நின்றனர். 
எந்த வித ஸ்டாப் வாட்சும் இல்லாமல் மன்னர் எவ்வாறு கால அளவை தீர்மானிக்கிறார் அவர் கொடுக்கும் அந்த B.G.M. எப்படி அந்த அந்த பிரேமிற்கு அப்படி பொருந்துகிறது? இன்று நினைத்தாலும் வியப்பே மேலோங்குகிறது. 
அந்த ரீல் ரீரிகார்டிங் முடிந்ததும் எழுந்து வந்த மன்னரிடம் என்னுடன் வந்தவர்களை அறிமுகப் படுத்தினேன். மன்னர் நலம் விசாரித்தார்.மீண்டும் அடுத்த ரீல் ஓடத் துவங்க மன்னர் சென்று அமர்ந்தார். அந்த ரீல் ரீரிகார்டிங்கையும் பார்த்து விட்டு மன்னரிடம் விடை பெற்றோம். 

 

Ganesh Ramaswamy
 

Leave a Reply