• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆசிய நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்படும் - ஜனாதிபதி

இலங்கை

பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இடம்பெற்ற 56ஆவது ‘ஆசியான்’ தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வங்குரோத்து நிலையை தற்போது முழுமையாக எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.

தற்போது நாம் துரித கதியில் முன்னேற்றத்தை நோக்கி நகரப்போகிறோம். அதன் போது ஆசியான் அமைப்பின் பயணத்தை முன்னுதாரணமாக கொள்வோம். ஆசியான் அமைப்புடன் மிக நெருக்கமாக செயற்படவும் எதிர்பார்த்துள்ளோம்.

அதுவே எனது அரசாங்கத்தின் கொள்கையாகும். ஏனைய அரசாங்களின் கொள்கையும் அதுவாகவே இருக்கும் என நம்புகிறேன்.

தென்கிழக்காசியாவுடன் எமக்கு உள்ள தொடர்புகள் மிகவும் வலுவானது. இந்தியா மற்றும் மாலைத்தீவு தவிர்ந்த தென்கிழக்காசியாவுடன் மிகவும் நெருக்கமான நாடாக இலங்கையே உள்ளது.

நாம் எமது கலாசார, பொருளாதார, அரசியல் தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

அதனாலேயே பிரதமராக பதவி வகித்த காலத்தில் மிகவும் அவசியமாகக் காணப்பட்ட சிங்கப்பூருடன் சுந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைசாத்திட்டேன். அதனை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் நிறைவுற்ற பின்னர் RCEP அமைப்பில் இணைந்துகொள்ள எதிர்பார்த்திருப்பதோடு, ஆசியான் அமைப்பின் ஏனைய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைசாத்திடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

எம்மால் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. நாம் முன்னோக்கியே செல்ல வேண்டும். இந்து – பசுபிக் பிராந்தியத்தில் ஆசியான் அமைப்பின் எதிர்கால கண்ணோட்டத்துடன் நாம் உடன்படுகிறோம்.

அந்த நோக்கை முன்னெடுத்துச் செல்வதற்கும் அதற்கேற்ப முன்னோக்கிச் செல்வதற்கும் நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.

கடல்சார் மையம் என்ற வகையில் இந்தோனேசியாவுக்கு நாம் ஆதரவு வழங்குகின்றோம். நாம் அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. இந்த நெருக்கடிகளை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply