• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடுவுல கொஞ்சம் காமிக்ஸ் மறந்து போச்சு !

சினிமா

#காமிக்ஸ்தலைமுறைகள்
எங்கள் தலைமுறை சிறுவயதில் கண்களால் மூளையினை இணைத்து கற்பனை எனும் மெகா பிக்ஸலில் காட்சியை அக கண்ணில் பார்த்து மகிழ்ந்த காமிக்ஸ் எனும் வீடியோ கேம்ஸ்கள் கண்ட தலைமுறையினர்....
இது பக்க விளைவு இல்லாதது. 
கற்பனை ஒட்டத்தை அதிகரிக்கும்
பெற்றோர்க்கு பய உணர்வை தராதது
புத்தகங்கள் படிப்பதில் உள்ள ஆரோக்கிய மனோநிலையை பார்ப்போம். எழுத்து வடிவிலான கதைகள் படிக்கும்போது அதன் கதாபாத்திரங்களை படிக்கும்போது நம் மூளையில் ஓர் வடிவம் பெறும். உதாரணமாக கதையில் வசந்தி " என்ற பெண்ணை கதைப்படி என் எண்ணப்படி மனதில் உருவகப்படுத்தி கொள்வேன் . இதேபோல் குமாரோ வேணுவோ ராஜாவோ அந்த வசந்தியை எவ்வாறு   உருவகப்படுத்துவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் . அதுவும் கதையில் அவள் நடந்துகொள்ளும் விதம் குறித்து ஒரு சின்ன நிழற்படம் மனதில் ஓடும் .என் மனதில் வசந்தி கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக இருந்தால் அவர்கள் கற்பனா சலனத்தில் அவள் அடக்க ஒடுக்கமாக இருக்க கூடும்  .
இப்படி படிப்படியாக வருகின்ற அழகுணர்ச்சி கற்பனைத்திறன் வருகின்ற காலங்களில் நம் பிள்ளைகள் நேரடியாக தொழில் நுட்பம் உதவியால் வீடியோ கேம்ஸ் , டீவி , கணினி என்று தஞ்சம் அடைந்து விடுகின்றனர் . இந்த டெக்னாலஜியை எண்ணி நாம் மூக்கில் விரலை வைத்தாலும்  இது எங்கு போய் முடியுமோ என்று தலையில் கை வைக்கிறோம் . அதாவது மூளை மற்றும் கற்பனையின் அடிப்படை பயிற்சி இல்லாமல் அதை தொட்டு தன் சுய கற்பனா சக்தியை இழக்கின்றனர் .
இது என் வகையில் எப்படி இருக்கின்றது என்றால் அன்பான உறவுகள் புரிந்து இணைந்து கலந்து மகிழ்ந்து ஒரு பிள்ளையை பெற்றெடுப்பது போல . அப்படி இருக்க தொழில் நுட்பம் என்ற பெயரில் ஒரு வயசு பிள்ளையை கொண்டு வந்து அவங்க  மடில போட்டு ... இதை வச்சி கொஞ்சிக்கோ.. என்பது போல் அந்த இனிய இயல்பாக வரும் கால  கட்டங்களை இழந்து அந்த பிள்ளையை கொஞ்சி கொண்டிருகிறார்கள் நம் தலைமுறையினர் . 
சரி .. நம்ம காமிக்ஸ் விஷயத்திற்கு வருவோம் ... கதைகளின் அடுத்த களம்தான் சித்திரக்கதைகள் சிலநேரங்களில் .கதைகளுக்கு வரையும் ஓவியர்கள் தரும் உருவங்கள் நம் மனதில் உருவாக்கப்பட்டு விடும் . உதாரணமாக கணேஷ் & வசந்த் , அப்புசாமி - சீதா பாட்டி .
தமிழில் படக்கதை என்றும் காமிக்ஸ் (Comics) என்றும் பேசப்படும் இவைகள் நமது இலக்கிய நூலக சொர்க்கவாசலுக்கு முதல் படியாய் இருந்து நம் படிக்கும் எண்ணத்தை தூண்டியவை ஆகும் .
#வேதாளம் - காட்டு தலைவன்
இவன் வம்ச வழியாக வேதாளமாக வருவான். இவன் முகம் வாசகர்கள் அறியாதபடி முகமூடியுடன் சித்திரக்கதை நகரும். நகருக்குள் நுழையும் போது நீண்ட கோட்,தொப்பி, கறுப்பு கண்ணாடியுடன் வலம் வருவான். இவனும் சூப்பர்மேன் மாதிரி பேண்ட்,டுக்கு மேல ஜட்டி போடுறவன்தான் . ஆனா பறக்க மாட்டான் . இந்த காமிக்ஸ் கேரக்டர் 1936ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாம் 
உடன் அவன் வளர்க்கும். (ஓ)நாய் ! அவன் மோதிரம் Phantom அச்சுடன் இருக்கும். அவன் எதிரியை குத்தும் போது அவன் தாடையில் அந்த மண்டை ஓடு " அச்சு பதிந்து விடும்.  அவ்வளவுதான் அந்த முத்திரை அழியாது. 
அதை நம் ஹீரோவே பின்னர் பார்க்க நேர்ந்தால் " டேய்.. போன மாசம் என்கிட்ட அடி வாங்கின கந்தசாமி' தானே நீ " என்று அவரே கண்டு பிடித்து விடுவார்.
வனத்துக்கு ஒரு மேனேஜர் வேறு உண்டு.. பேரு குரன். 
இதில் அந்த ஓநாயும் வெள்ளை குதிரையும் வம்சா வழியாக அவனுக்கு சேவை செய்யும்?!
#இரும்புகை_மாயாவி - ஏஜெண்ட்
விபத்தில் மணிக்கட்டு வரை இழந்த கைக்கு பதிலாக ஓர் விஞ்ஞானி இரும்பு கையை அவனுக்கு பொருத்தி விடுவார்.  Introductory offer ஆக கரண்டில் ( கவனிக்க.. கரண்டியில் அல்ல) கை வைத்தால் ஆளே மறைந்து விடும் சக்தியோடு கொடுத்து விடுவார். இரும்பு கையின் விரலை நுழைத்து சார்ஜ்" வேறு செய்து கொள்வார் மாயாவி. சார்ஜ் குறையும் போது மறைந்த உருவம் மற்றவர்க்கு தெரிந்து விடும்.
நான் சிலசமயங்களில் மாயாவிக்கு அப்படி விபரீதமாக எதுவும் ஆக கூடாது என்று சாமி கும்பிட்டு விபூதி எல்லாம் பூசி அந்த காமிக்ஸ் படித்து இருக்கிறேன்.
#லாரன்ஸ்_டேவிட், - இரட்டையர்கள்
லாரன்ஸ் மூளை உள்ள டிடெக்டிவ் டேவிட் 
ஆஜானுபாகுவான பாடிகார்ட். இவர்களை பற்றி அதிகம் நினைவிற்கு வரவில்லை. ஆனால் மிகவும் வரவேற்பு பெற்ற காமிக்ஸ் ஹீரோக்கள்.
#மான்ட்ரக்_லொதார் - மேஜிக் வித்தகன்
மாண்ட்ரக் எதிரிகளை தன் ஹிப்னாடிசம் வித்தையில் வெற்றி பெறும் மேஜிக் நிபுணன்.  அவனுக்கு துணை பலசாலி லொதார் என்ற ஆப்ரிக்க அமெரிக்கன். இது மாயாஜால காமிக்ஸ் வகையில் படிக்க ஆர்வமாக இருக்கும்.
#ரிப்_கெர்பி 

நம்பமுடியாத  திறன்களைக் கொண்ட திகைப்பூட்டும் சாகசக்காரர்கள் மத்தியில், ஒருவர் தனித்து நின்றார். அவர் மாய சக்தியை விட   தனது மூளையை அதிகம் பயன்படுத்தினார். அவர் ஜேம்ஸ் பாண்ட் போன்ற பெண்களை வசீகரிப்பவர் அல்ல , ஆனால் அவருக்கு ஒரு காதலி இருந்தாள். நேவியில் பணியாற்றி சீக்ரட் டிடெக்டிவ் ஆனவர் .
#கிஸ்கோ_பாஞ்சோ - கௌபாய் வீரர்கள்
இவர்கள் கிளின்ட் ஈஸ்ட்வுட்" டைப்‌ வீரர்கள். இதில் பாஞ்சோ காமெடி பீஸ். இந்த காமிக்ஸ் கதைகள் பழைய கௌபாய் படங்களை நம் மனக் கண்ணில் நிறுத்தும்.
#காரிகன் - ரகசிய ஏஜெண்ட்
எந்த ஒரு சூப்பர் பவரும் இல்லாத சராசரி துப்பறியும் ஏஜெண்ட்… ஆனால் விவேகமான தன்னம்பிக்கை நிறைந்த ஹீரோ.  எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் மேல் தட்டு உலக கிரைம்கள் இந்த காமிக்ஸில் பேசப்படும்.
இந்த மாதிரி புத்தகம் படிக்கும் அன்றைய தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள். கதைகள் படிக்கும் பழக்கம் அறவே மறந்து போன இந்த தலைமுறையினர் வீடியோ கேம்ஸ் மற்றும் மொபைலில் மூழ்கி முத்துக்களை விடுத்து வெறும் சிப்பிகளை எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
என் நினைவில் தோன்றிய காமிக்ஸ் ஹீரோக்கள் மேலே. சிலது விடுபட்டு இருக்கலாம். உங்கள் சிறுவயது காமிக்ஸ் அனுபவங்களை பகிரலாமே !

- ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்

 

Leave a Reply