தலை ஒட்டியப்பிறந்த இரட்டையர்கள் - AI உதவியால் அறுவைசிகிச்சை வெற்றி
நைஜீரியாவில், தலைப்பகுதியில் ஒன்றிணைந்த நிலையில் (Craniopagus) பிறந்து, தங்கள் வாழ்வின் முதல் 19 மாதங்களை அப்படியே கழித்த இரட்டைச் சகோதரிகள், AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சைகள் மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இரட்டைச் சகோதரிகள் எவ்விதப் பாதிப்புமின்றி, மகிழ்ச்சியோடு தங்களது மூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கின்றனர்.
'மெர்சி' (Mercy), 'குட்னஸ்' (Goodness) என்று பெயரிடப்பட்ட இந்த இரட்டையர்கள், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நைஜீரியாவின் எகிட்டி (Ekiti) மாநிலத்தில் பிறந்தனர்.
மண்டையோடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்த இவர்களுக்கு மூளைத் திசுக்களும், இரத்த நாளங்களும் பொதுவானவையாக இருந்தன என்று 'ஜெமினி அன்ட்வைன்ட்' (Gemini Untwined) என்ற இங்கிலாந்துத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு மண்டையோடு ஒட்டியவாறு பிறக்கும் இரட்டையர்களின் சிகிச்சைக்காகவே பிரத்யேகமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த இரட்டையர்களுக்கு ஆறு மாத வயதாக இருந்தபோது, அவர்கள் லண்டனில் உள்ள 'கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்' (Great Ormond Street) குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் பேராசிரியர் நூர் உல் ஓவாஸ் ஜிலானி (Professor Noor ul Owase Jeelani) என்பவரிடம் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.






















