• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது - ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

இலங்கை

முன்னாள் அரச புலனாய்வு தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்கு, நாடாளுமன்றக் குழு ஒன்றை அனுப்புவதே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியில் ஒரு அபாயகரமான அரசியல் சூழ்நிலை உருவாகி வருவதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

“முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சல்லே நடத்தப்பட்ட இந்த விதம் நாட்டில் ஒரு சாதாரணமான நடைமுறையாக மாறினால், எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக் குழுக்களும் இதே போன்றதொரு ஆபத்தான சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்.

இது நாட்டின் சட்ட ஒழுங்கிற்கு மிகவும் அபாயகரமான ஒரு போக்காகும்.”

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையாக இருந்தாலும், அது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளுக்கு இணங்க மட்டுமே அமைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வரும் விதம் குறித்து, தாம் மிகவும் விழிப்புடனும் உன்னிப்பாகவும் கண்காணித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply