• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தம்புள்ளை குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை - 8 வாரங்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு

இலங்கை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் அதிநவீன குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

தம்புள்ளை விவசாய குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை தொகுதியின் எஞ்சிய பணிகளை எதிர்வரும் 6 முதல் 8 வாரங்களுக்குள் நிறைவு செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் இணைந்து ஆரம்பித்து வைத்த இத்திட்டம், இதுவரை நிறைவடையாமல் இருப்பது குறித்து அமைச்சர் தனது கவலையை வெளியிட்டார்.

மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் (CECB) உதவிப் பொது முகாமையாளர் வி. ரத்னம் இக்களஞ்சியசாலையில் காணப்படும் தொழில்நுட்ப சிக்கல்களை பற்றி கூறும்போது, இதுவே பிரதான பிரச்சினையாகக் கருதப்படுகிறது. பழுதடைந்த இயந்திரங்களை மாற்றுதல் மற்றும் ஈரப்பதன் கட்டுப்பாட்டு முறைகளைச் சீரமைக்க வேண்டியுள்ளது.

கூரையிலிருந்து நீர் கசிதல் மற்றும் தரை மட்டத்தில் உள்ள சீரற்ற நிலை, நிலையற்ற மின்னழுத்தம் காரணமாக உபகரணங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மின்னழுத்த நிலைப்படுத்தியை (Voltage Stabilizer) பொருத்துவது அவசியமென வலியுறுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் 99 சதவீதப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட தனியார் கட்டுமான நிறுவனம், குளிரூட்டும் அமைப்பில் உள்ள குறைபாடுகளை மட்டும் 4 வாரங்களுக்குள் சரி செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தக் களஞ்சியசாலை பயன்பாட்டிற்கு வரும்போது, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தமது மேலதிக மரக்கறிகள் மற்றும் பழங்களை வீணாகாமல் நீண்ட காலம் பாதுகாத்து வைக்க முடியும். இது சந்தையில் திடீர் விலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
 

Leave a Reply