• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாய்ந்தமருது பொலிஸ் – சுகாதார துறை இணைந்து கலந்துரையாடல்

இலங்கை

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் புதிதாக கடமையேற்றுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஐ.எம். மர்சூக் அவர்களுக்கும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்  அவர்களுக்கும் இடையிலான  முக்கிய கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருது சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின் போது, சாய்ந்தமருது பிரதேசம் தற்போது எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, சுற்றுச்சூழல் மாசுபாடு, கழிவகற்றல் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அத்துடன், இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை முன்வைக்கும் வகையில், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயல்திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் கள ஆய்வுகளை மேற்கொள்வது, சுற்றுச்சூழலை பாதிக்கும் சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் துறையும் சுகாதார துறையும் இணைந்து செயல்படுவதற்கான ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது எனவும், எதிர்காலத்தில் இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 

Leave a Reply