• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நோர்வூட் பிரதேச செயலகம் இடம் மாற்றப்படாது - ஜீவனிடம் தெரிவிப்பு

இலங்கை

நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்படாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தெரிவித்தார்.

நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  அவர்  இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஹட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில்(டிக்கோயா) இன்றைய தினம்(27) இடம்பெற்றிருந்தது.

குறித்த   ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான்”” நிலவிவரும் சிறுநீரக நோய் தாக்கதிற்கான வைத்திய சேவைகளை வழங்குவதற்காக வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறைகள் நிலவுவதால் அதனை விரைவில் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டிருந்தார்.

அத்துடன் ”பல பாடசாலைகளில் மலசலக்கூட வசதிகள் இல்லை எனவும், அதனை தாம்  உலக வங்கியின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்  பாடசாலை மாணவர்களுக்கிடையிலான  போதைப்பொருள் பிரச்சினை கடந்த 2021 ஆம் ஆண்டும்  மலையகத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்ததாகவும், அப்பிரச்சினையைத் தீர்க்க பொலிஸாரினூடாக  நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு கண்கானிப்பு குழு ஒன்றை நிறுவ தாம் தீர்மானித்துள்ளதாகவும்,  அதில் கட்டாயமாக ஒரு பெண் பொலிஸ் அதிகாரி மற்றும்  ஆண் பொலிஸ் அதிகாரி இருப்பார் எனவும் அந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் இந்த பிரச்சினையை  கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிஸார் நினைத்தால் விழிப்புணர்வு நிகழ்வுகள் செய்ய முடியும் எனவும் மாதத்திற்கு இரண்டு பாடசாலைகளை சரி முறையே செய்தால் கூட ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது  கோரிக்கையை ஏற்று நோர்வூட் பிரதேச செயலக இடமாற்றத்தை நிறுத்தியமைக்காக இந்த நேரத்தில் அரசங்கத்திற்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், கலைச்செல்வி, ஹட்டன்-டிக்கோயா நகர சபை செயலாளர், மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர், நோர்வூட் பிரதேச சபை செயலாளர், அரச நிறுவன அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம சேவகர்கள் எனப்  பலரும்  கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply