வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை
பிங்கிரியவில் அமைந்துள்ள வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் அண்மையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டாம் ஆண்டு மாணவி வெள்ளிக்கிழமை (மே 23) மாலை கல்லூரியில் உள்ள தனது விடுதிக்குள் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மரணம் தொடர்பாக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சனிக்கிழமை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்த பிறகு, நீதிவான் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கல்லூரியின் மாணவர்கள் குழு ஒன்று கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மௌனப் போராட்டம் நடத்தியதாகவும், மாணவியின் மரணத்திற்கு கல்லூரி ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது.
கல்லூரியில் சில விரிவுரையாளர்களின் துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலால், மாணவியால் அதைத் தாங்க முடியாமல் போனதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
உயிரிழந்த மாணவி கண்டி, தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.






















