• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது

சினிமா

" எம்.ஜி.ஆர் அவர்களின் கனிந்த உள்ளத்தின் விளைவாக, கடினமான உழைப்பில் ஈடுபட்டிருக்கும் ரிக்ஷாத் தொழிலாளர்கள் மழையில் படும் அவதியினைக் கண்டு அவர்களது துயரைத் துடைக்க 6,000 மழை அங்கிகளை வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சியில், அவைகளை அளிக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

இந்தக் கோட்டு, பிளாஸ்டிக்கிலே செய்ததற்குப் பலவாறு தவறாகப் பேசியதாகத் தோழர் வீரப்பன் அவர்கள் பேசும்போது எடுத்துச் சொன்னார்கள். இந்த மழைக்கோட்டை வாங்கி வழங்கிடும்போது ‘நாமும் ஒன்று போட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறதே’ என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அவ்வளவு அழகாக அவைகள் தைக்கப்பட்டுள்ளன.

ரிக்ஷா தொழிலாளர்கள் படும் கஷ்டங்களைக் கண்ணாரக் கண்டவர்கள், இதைப்பற்றிக் குறைசொல்ல மாட்டார்கள். மாற்று அரசியல் கட்சியினர்தான், ‘தேர்தல் காலத்தில் இது நடக்கிறதே’ என்று பயப்படுவார்கள். ஆனால் நாட்டு மக்கள் மனதார வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

எம்.ஜி.ஆர் அல்லாமல், அவர்களிலே ஒருவர் இதைச் செய்திருந்தால் பாராட்டுவார்கள் புகழ்பண் பாடுவார்கள். அவர்கள் பாராட்ட வேண்டும் என்பதல்ல ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளை, துயர்களைத் தெரிந்த நாட்டு மக்கள் இதை உணருவார்கள்.

‘பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.

ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்

அதைப்போல எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷா தொழிலாளர்கள் மழையில் படும் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் மழையில் வாடுவதைக் கண்டு இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டு, நல்லதோர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.

தம்பி , எம்.ஜி.ஆர் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.

“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று தம்பி எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?

நம்முடைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.

இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம். நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம். நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம்,

(நம்நாடு - 4.12.61)

Leave a Reply